சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். பட்டியலின மாணவரான அவரும், அவரோடு படித்து வந்த நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர். இதனிடையே, கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அந்த இளம் பெண்ணுடன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், இருவர் உயிரிழந்து விட்டதால், மீதமுள்ள 15 பேர் மீது வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கானது கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கில் 1318 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டிருந்த யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள் வசந்தம், செல்வகுமார், தங்கதுரை (யுவராஜின் சகோதரர்), சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, ஸ்ரீதர், சுரேஷ் ஆகிய 5 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால், அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து, யுவராஜ் உட்பட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். அதேபோல், விடுதலையான 5 பேருக்கு தண்டனை வழங்கக் கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா, சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, முக்கிய சாட்சியாக இருந்த சுவாதி (கோகுல்ராஜ் உடன் படித்தவர்) திடீரென பிறழ்சாட்சியாக மாறினார். அவரை, நேரில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த நவம்பர் 25ஆம் தேதியன்று, சுவாதியை போலீஸார் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவரிடம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கேமராவில் பதிவான காட்சிகள் அவரிடன் காண்பிக்கப்பட்டு, அந்தக் காட்சியில் இருக்கும்பெண் நீங்கள் தானா? பக்கத்தில் இருப்பவர் யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிதிபதிகள் எழுப்பினர். அதற்கு வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. அந்த ஆண் கோகுல்ராஜ் போல் தெரிகிறது. அதை உறுதியாக சொல்ல முடியாது என்று சுவாதி பதிலளித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், சத்தியம் என்றைக்கு வேண்டுமானாலும் சுடும் என்று கூறி, விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தனர். அன்றைய தினம் சுவாதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும், அன்றைக்காவது உண்மையைச் சொல்ல முயற்சியுங்கள். எனவும் தெரிவித்த நீதிபதிகள், அன்றைக்கும் இதே நிலை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த்வெங்கடேஷ் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சுவாதியை சாட்சி கூண்டில் ஏற்றி சத்திய பிரமாணம் பெற்றுக்கொண்டு பின்னர் சுவாதியிடம் நீதிபதிகள் விசாரணை தொடங்கினர்.
அப்போது, கடந்த 25ஆம் தேதி இந்த நீதிமன்றம் உங்களிடத்தில் சில கேள்விகளை எழுப்பியது இது தொடர்பாக நீங்கள் தெரிவித்த பதில் ஏற்புடையதில்லை. எனவே இது தொடர்பாக உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும், கடந்த 25ஆம் தேதி நீங்கள் கூறிய சாட்சியின் படியே இருக்கிறீர்களா இல்லை தற்பொழுது வேறு எதுவும் தெரிவிக்க விரும்புகிறீர்களா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, வேறு எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை; நன்றாக யோசித்து தான் இந்த முடிவினை எடுத்துள்ளேன் என்று சுவாதி பதிலளித்தார். மேலும், கடந்த வாரம் அளித்திருந்த பதிலில் எந்தவிதமான மாற்றமும் இல்லை எனவும் சுவாதி உறிதியாக தெரிவித்தார்.
இதையடுத்து, “கிழமை நீதிமன்றத்தில் சுவாதி வழங்கிய சாட்சியமும், இந்த நீதிமன்றத்தில் அவர் வழங்கிய வாக்குமூலத்தையும் வைத்து பார்க்கும், போது நீதிமன்றத்தின் அவர் தெரிவிப்பது பொய் என தெரிய வருகிறது. நாங்கள் அந்த cctv விடியோ பார்த்ததில் அது சுவாதிதான் என தெறியவருகின்றது. ஆனால் சுவாதி அந்த விடியோவில் இருப்பது நான் இல்லை என தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார். அருகில் இருப்பவர் கோகுல்ராஜ் என்பதை தெரிவித்த சுவாதி, தான் இருக்கும் விடியோவை பார்த்து தன்னை தெறியவில்லை என கூறுவது ஆச்சரியமாக உள்ளது. இந்த வழக்கின் முக்கியத்துவத்தை அறியாமல் சுவாதி பொய்யான சாட்சி வழங்குவதாக தெரிய வருகிறது இந்த நீதிமன்றத்தில் சுவாதி அளிக்கும் வாக்குமூலம் உண்மையானது அல்ல.” என்று தெரிவித்த நீதிபதிகள், உண்மையை மறைத்ததாக சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக உத்தரவிட்டனர்.
மேலும், சுவாதி மீண்டும் உண்மையை கூற இரண்டு வாரம் அவகாசம் பிறப்பிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக விளக்கம் அளிக்க சுவாதிக்கு கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவித்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.