திருவனந்தபுரம்: விழிஞ்ஞம் அதானி துறைமுகத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தீவிரவாதிகளின் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணையை தொடங்கியுள்ளது. திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் சார்பில் வர்த்தக துறைமுகம் கட்டும் பணிகளை எதிர்த்து, விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் விழிஞ்ஞம் போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது. 36 போலீசார் கடுமையாக தாக்கப்பட்டனர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே துறைமுகத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பண உதவி கிடைத்து வருவதாக கேரள அமைச்சர் சிவன்குட்டி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வன்முறை சம்பவங்களில் சில தீவிரவாத அமைப்புகள் தலையீடு இருப்பதாகவும் தகவல் வெளியானது. மத்திய உளவுத்துறைக்கு இது தொடர்பாக முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை (என்ஐஏ) விசாரணையை தொடங்கியுள்ளது. நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் விழிஞ்ஞம் போலீஸ் நிலையம் சென்று விவரங்களை சேகரித்தனர். மேலும் உளவுத்துறை போலீசிடம் இருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதற்கிடையே சமீபத்தில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பினர் கடந்த சில நாட்களுக்கு முன் விழிஞ்ஞத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் வைத்து ரகசிய கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தான் வன்முறை சம்பவங்களை அரங்கேற்ற திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இதுதொடர்பாகவும் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.