மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (30) முற்பகல் நடைபெற்றது.
இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல் தொடக்கம் மட்டக்களப்பு வரையான கரையோர பிரதேசத்தில், அரச மற்றும் தனியார் காணிகளை அடையாளம் காண்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்தப் பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்து மட்டக்களப்பை 2023 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே. கருணாகரன் உட்பட பல பிரதேச செயலாளர்கள் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஏ. சூலானந்த பெரேரா, வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.சி.எம். ஹேரத் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.