சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது, அவருக்குப் பாதுகாப்பு தரவேண்டிய பணியில் இருந்து மாநில அரசு தவறிவிட்டதாக ஆளுநரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
கடந்த ஜூலை மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது, அவருக்குப் பாதுகாப்பு தரவேண்டிய பணியில் இருந்து மாநில அரசு தவறிவிட்டது. பல மெட்டல் டிடெக்டர் கருவிகள் வேலை செய்யவில்லை. காவல் துறையினர் பழுதடைந்த கருவிகளை, பெயருக்காக வைத்திருந்தனர். உரிய ஆதாரத்தின் அடிப்படையில், இதை குற்றச்சாட்டாகத் தெரிவித்துள்ளோம்.
மத்திய அரசின் கனவுத் திட்டமான, வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழக அரசு மூலம் இதுவரை 69 லட்சம் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்கான 100 சதவீதநிதியை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை மாநில அரசு முறைகேடு செய்துள்ளது. இதுகுறித்தும் ஆளுநரிடம் முறையிட்டோம்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தார். ஆனால், அந்த அவசரச் சட்டத்தை தமிழக அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. அவசர சட்டம் காலாவதியாகி விட்டதாக தமிழக அரசு இப்போது கூறுகிறது.
இந்த மசோதாவில் பல சட்டச்சிக்கல்கள் உள்ளன. அதனால், ஆளுநர் நேரம் எடுத்துக் கொண்டுள்ளார். எனவே, ஆளுநர் மீது தமிழக அரசு குறைகூறுவதை ஏற்கமுடியாது.
காவல் துறை உயரதிகாரிகள், அரசியல் கட்சியை சார்ந்து வேலை செய்கின்றனர். நாட்டுக்காகப் பணியாற்றும் துணை ராணுவத்தினரை தமிழகத்தில் சில அரசியல் கட்சியினர் ஆபாசமாகவும், கேவலமாகவும் பேசுகின்றனர். ‘‘நீ டெல்லியில்தானே இருக்கிறாய். உன் குடும்பம் இங்கு தானே இருக்கிறது. நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி, தேச விரோத செயலில் இறங்கியுள்ளது குறித்து ஆளுநரிடம் தெரிவித்தோம்.
அந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு, மாநில அரசு பாதுகாப்புக் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அதே நேரம், அவ்வாறு பேசியவர்களை உடனே கைது செய்திருக்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.