சொத்துக் குவிப்பு வழக்கில் ஜனவரி 10-ம் தேதி நேரில் ஆஜராக திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சம்மன்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் ஜன.10-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னையில் உள்ளஎம்.பி., எம்எல்ஏக்கள் மீதானவழக்குகளை விசாரிக்கும் சிறப்புநீதிமன்றம் சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பின்னர் டெல்லி, சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் உட்பட ஆ.ராசாவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் அடிப்படையில் ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஸ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய்சடரங்கனி மற்றும்கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ், மங்கள் டெக் பார்க் ஆகியநிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

579% அதிக சொத்துக் குவிப்பு: 7 ஆண்டுகள் நடந்த விசாரணைக்கு பிறகு ஆ.ராசா, கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ், மங்கள் டெக் பார்க், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் மீது கடந்த மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தைவிட 579 சதவீதம் அதிகமாக ரூ.5.53 கோடி அளவுக்கு ஆ.ராசா சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக சிபிஐ தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, நீதிபதி டி.சிவக்குமார் முன்புநேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் அலெக்ஸாண்டர் லெனின் ராஜா ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் 2 தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகள் ஜன.10-ல் நேரில் ஆஜராகவேண்டும் என சம்மன் பிறப்பித்து,விசாரணையை தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.