பேறுகாலத்தின் போது ஏற்படும் தாய்-சேய் இறப்பு விகிதத்தை இந்தியா வெகுவாக குறைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பேறுகால இறப்பு தொடர்பாக இந்திய தலைமைப் பதிவாளர் சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் 2014-2016ஆம் ஆண்டில் ஒரு லட்சம் குழந்தை பிறப்புக்கு 130 என்ற அளவில் இருந்த பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் 2018-20 காலகட்டத்தில் 97 என குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேறு கால இறப்பு விகிதம், கேரளா 19, மகாராஷ்டிரா 33, தெலங்கானா 43, ஆந்திரா 45, தமிழ்நாடு 54, ஜார்க்கண்ட் 56, குஜராத் 57, கர்நாடகா 69 என்ற அளவில் உள்ளன என்றும், இவை இந்தியாவின் சராசரியை காட்டிலும் குறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக பேறுகால இறப்புகளுடன் அஸ்ஸாம் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் பேறுகால இறப்பு விகிதம் 195 ஆக உள்ளது.
தேசிய சுகாதாரக் கொள்கையின் அடிப்படையில், 1 லட்சம் பிறப்புகளுக்கு பேறுகால இறப்பை 100-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதை இந்தியா எட்டியுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் குழந்தை பிறப்புகளுக்கு பேறுகால இறப்பை 70-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா தற்போது செயல்படுகிறது.
இந்நிலையில் பேறு கால இறப்பை குறைத்த சுகாதாரத்துறை செயல்பாடுகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். “இது மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து, நமது செயல்பாடுகள் வலுவாக உள்ளன” என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: முட்டை சாப்பிடுவதால் அறிவாற்றல் அதிகரிக்கிறதா? – என்ன சொல்கிறது ஆய்வு முடிவுகள்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM