திருப்பூர் மாநகர் எஸ்.வி. காலனியில் மின்வாரிய அலுவலகம் அருகே மருந்தகம் நடத்தி வருபவர் விக்னேஷ். இவரின் மருந்தகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு, வந்த இரண்டு இளைஞர்கள், தூக்க மாத்திரை கேட்டுள்ளனர்.
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரை வழங்க முடியாது என்று, விக்னேஷ் கூறவே, இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடையில் இருந்த விக்னேஷின் தந்தை தண்டபாணி இளைஞர்கள் தகராறு செய்வதால் விக்னேஷை வீட்டுக்கு செல்லும்படி கூறி அனுப்பி வைத்துள்ளார்.
அப்போது, அந்த 2 இளைஞர்களும் தண்டபாணியை வழிமறித்து தாக்கினர். இதுதொடர்பாக விக்னேஷ், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த திருப்பூர் வடக்கு போலீஸார் 2 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் திருப்பூர் ராம் நகரைச் சேர்ந்த மனோஜ்குமார் (27), கொங்கு பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த விபின்குமார் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் தூக்க மாத்திரைக்கு அடிமையானதால், அதைக் கேட்டு மருந்தகத்தில் பிரச்னையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் வடக்கு போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு பிரிவு, மருந்தக ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான குழுவினர், மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகள் தொடர்பாக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.