புதுச்சேரி சட்டசபையில் உள்ள 30 எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பளம் கடந்த 2010ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு இதர படிகள் சில உயர்த்தப்பட்டாலும், சம்பளம் உயர்த்தவில்லை. இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க சமீபத்தில் அசோக்பாபு எம்.எல்.ஏ., தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இக்கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் அசோக்பாபு தலைமையில் நடந்த இக்கூட்டத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். கூட்டத்தில், கமிட்டியின் துணைத் தலைவர் நாஜிம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், ரமேஷ், ரமேஷ் பரம்பாத், கொள்ளப்பள்ளி சீனுவாச அசோக் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ., க்களின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அடிப்படை ஊதியம்
மற்ற மாநிலங்களை காட்டிலும் புதுச்சேரியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் குறைவான மாத ஊதியம் பெறுகின்றனர். எம்.எல்.ஏ.,க்களின் அடிப்படை ஊதியம் 8 ஆயிரமாக உள்ளது. அனைத்து இதர படிகளையும் சேர்த்து மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர்.
இதனை தமிழக எம்.எல்.ஏ.,க்கள் போன்று அடிப்படை ஊதியத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றும், இதர படிகளை சேர்த்து 1,05,000 ரூபாய் சம்பளமாக உயர்த்த வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து விவாதிக்கப்பட்டது.
தினசரி படி
சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும்போது தற்போது எம்.எல்.ஏ.,க்கள் தினசரி படியாக ரூ.500 பெறுகின்றனர். இதனை ரூ.1,000 ஆக உயர்த்த வலியுறுத்தப்பட்டது.
எம்.எல்.ஏ.,க்களுக்கு டிரைவர், உதவியாளர்கள் கட்டாயமாக தேவைபடுகின்றனர். எனவே ஒரு டிரைவர், ஒரு உதவியாளரை அரசு சார்பில் நியமிக்க வேண்டும். குரூப்-1 அதிகாரிக்கு இணையாக மருத்துவ வசதிகள் மட்டுமே அளிக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சை தனியார் மருத்துவமனையில் பெற்றால் குறிப்பிட்ட தொகை மட்டுமே தரப்படுகிறது. ரூ.3 லட்சம் செலவு செய்தாலும் ரூ.1.5 லட்சம் மட்டுமே தரப்படுகிறது. அதனை மாற்றி, முழு மருத்துவ உதவியும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதர படிகள்
தொகுதிப்படி இன்னும் ஆதிகாலத்தில் உள்ளது. ரூ. 5 ஆயிரமாக உள்ள இந்த படியை ரூ. 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
தொலைபேசி படியை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என முன்மொழிந்து கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ., க்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தை, 50 ஆயிரமாக உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக, எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம், இதர படிகள் உயர்வுகள் குறித்து கமிட்டி எடுத்தமுடிவுகள் சபாநாயகர் செல்வம் மூலம் முதல்வர் ரங்கசாமிக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.
இந்த பரிந்துரையை, முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்றபின் முடிவுகள் அறிவிக்கப்படும்.
சம்பள விபரம்
புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் தற்போது சம்பளம் மற்றும் இதர படிகளை சேர்த்து ரூ.50 ஆயிரம் பெறுகின்றனர். இதில் வருமான வரி பிடித்தம் போக ரூ.45 ஆயிரம் பெறுகின்றனர். கர்நாடகா, தமிழ்நாடு, டில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இது குறைவு.புதுச்சேரி எம்.எல்.ஏ., க்கள் தற்போது பெறும் சம்பளம் மற்றும் இதர படிகள் விபரம் வருமாறு:அடிப்படை சம்பளம் -ரூ.8,000; தொகுதிப்படி-ரூ.5,000; தொலைபேசி படி- ரூ.5,000; தொகுப்பு படி-ரூ.2,500; போஸ்டல் படி -ரூ.2,500; போக்குவரத்து படி-ரூ.20,000; இழப்பீட்டு படி-ரூ.7,000.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்