வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகளில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து விஷமாவதாக புகார் எழுந்துள்ளது. இதனை கலெக்டர்கள் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக்ததில் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுநீர் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆறு, ஏரி, குளங்கள் அவற்றின் அழகுகளை இழந்து வருகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் கருணை காட்டாமல் உடனடியாக அகற்ற வேண்டும். பட்டா வழங்கப்பட்டு இருந்தாலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றப்பட்டு வருகிறது. ஆனால் நீர்நிலைகளில் கலக்கப்படும் கழிவுநீர் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதால், குடிநீர் ஆதாரங்களாக இருந்த நீர்நிலைகள் தற்போது, கழிவுநீர் தேங்கும் குட்டையாக மாறி வருகிறது.குறிப்பாக, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக செல்லும் பாலாற்றின் பல பகுதிகளில் வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை கொட்டப்பட்டு, பாலாறு மாசடைந்து வருகிறது. மேலும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது.
ஒரு காலத்தில் மழைவெள்ளம் பால்போல ஓடியதாகவும் இதனால் ‘பாலாறு’ என பெயர் பெற்றதாகவும் கூறுகின்றனர். இந்த பாலாற்றில் இருந்து பெறப்படும் தண்ணீரைக்கொண்டு, பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், நீர்பாசன வசதி பெற்றுள்ளனர். இப்படி பாலாற்றை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர்.காலப்போக்கில், பாலாற்றில் ஆக்கிரமிப்பு, இரவு- பகல் பாராமல் நடக்கும் மணல் கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. மணல் கொள்ளையர்களால் சுரண்டப்பட்ட பாலாற்றில் மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஒரு புறம் என்றால், தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீர் மற்றொரு புறம். இதனால் தற்போது பாலாறு, ‘பாழாறாக’ மாறி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கி, வேலூர், ராணிப்பேட்டை என 3 மாவட்டங்களிலும் பாலாற்றில், நச்சு கலந்த கழிவுநீர் கலப்பதாக புகார்கள் உள்ளது. எனவே, கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவையும் தங்கள் பங்குக்கு கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே பாலாற்றில் விடுவதால் பாலாறு இன்று விஷமாக மாறி வருகிறது. பாலாற்றை பாதுகாக்க வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் இதனை கண்டுகொள்ளாத நிலை நீடிக்கிறது.
இதனால் பாலாற்றை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மாசடைந்து குடிநீரும் மெல்ல, மெல்ல குடிக்க லாயக்கற்ற நிலைக்கு மாறிவருகிறது. இதனால் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில், நிலத்தடி நீர் விஷமாவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே மாவட்ட கலெக்டர், உடனடியாக பாலாற்றில் கலக்கும் நச்சு கலந்த, கழிவுநீர் குறித்து ஆய்வு செய்து, எங்கிருந்து இந்த கழிவுநீர் வெளியேறுகிறது என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரியஏரியில் திருப்பத்தூர் நகரத்தில் உள்ள இறைச்சி கழிவுகள், நகராட்சி குப்பைகள் கொட்டப்படுகிறது. நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் ஏரியில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டது. ஆனால், மீண்டும் இந்த ஏரியில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் உள்ளது. மடவாளம் ஏரி, காக்கங்கரை பெரிய ஏரி, சுந்தரம்பள்ளி துலாநதி ஆறு, உள்ளிட்ட ஏரிகள், பொதுப்பணித்துறை ஏரியின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகிறது. ஊராட்சிகள் கட்டுப்பாட்டில் 323 ஏரிகள், குட்டைகள் உள்ளது. இந்த பகுதிகளிலும் ஊராட்சியில் உள்ள குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகிறது. ஆதியூர் ஏரியில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கழிவுகள் இந்த ஏரியில் கொட்டப்படுகிறது. சேலம் மெயின்ரோட்டில் புலிக்குட்டை ஏரி, அந்தனேரி முழுவதுமாக கழிவுகள் கலந்து துர்நாள்ளம வீசி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் ஏரியில் தோல்தொழிற்சாலை கழிவுநீரும், சுமைதாங்கி ஏரியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. புளியந்தாங்கல் ஏரி, தண்டலம் ஏரி, புளியங்கண்ணு ஆகிய ஏரிகளில் தோல்தொழிற்சாலை கழிவுநீர் கலக்கிறது. அதேபோல், நெமிலியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் நெமிலி பேரூராட்சியில் உள்ள குப்பைகள், கழிவுநீர் கலக்கிறது. பாலாற்றிலும், ஏரிகளிலும் திருப்பிவிடப்பட்டுள்ள கழிவுநீரை தடுத்து நிறுத்த வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள செய்யாறு ஆற்றில் செய்யாறு டவுனில் உள்ள குப்பைகள் கொட்டப்படுகிறது. நெசவுத்தொழில் மூலம் வெளியேறும் சாயக்கழிவுகள் செய்யாற்றில் கலக்கிறது. ஆரணி கமண்டலநாகநதி ஆற்றில் சாயக்கழிவுகள், குப்பை கழிவுகள் கலக்கிறது. அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், இரும்பேடு ஏரி, பல்லேரிப்பட்டு, வேலப்பாடி ஏரி, பையூர் ஏரி, திருமலை சமுத்திரம் ஏரி, களம்பூர் ஏரி ஆகியவற்றில் அரிசி ஆலை கழிவுகள், கழிவுநீர் கலக்கிறது.
மேலும் ஆரணி டவுன் சூரியகுளத்தில் கழிவுநீர் கலக்கிறது. ஏரி, குளங்களில் கலக்கும் கழிவுநீரையும் தடுக்க வேண்டும். இப்படி நீர்நிலைகளில் கலக்கும் கழிவுநீரை தடுக்க மாசுகட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை, 4 மாவட்ட கலெக்டர்கள் களத்தில் இறங்கி தடுப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பாதாள சாக்கடை உள்ள மாநகராட்சியிலும் கழிவுநீர் பிரச்னை
வேலூர் மாநகராட்சியில் உள்ள பலவன்சாத்து ஏரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விருபாட்சிபுரம், ஓட்டேரி, பலவன்சாத்து ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலக்கிறது. இதனால் இந்த ஏரியில் உள்ள நீர் மாசடைந்து கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. பலவன்சாத்து ஏரி நீர் முழுவதும் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. குப்பை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் பலவன்சாத்து ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். இதேபோல், சதுப்பேரி, கழிஞ்சூர், காட்பாடி தாராபடவேடு உள்ளிட்ட பல ஏரிகளில் கழிவுநீர் கலக்கிறது. அதனையும் தடுத்து நிறுத்த நடவடிக்ைக எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் உள்ள மாநகராட்சியிலும் கழிவுநீர் பிரச்னை உள்ளதாக மக்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர்.
மனிதனுக்கு ஒரு நாளைக்கு 135 லிட்டர் தண்ணீர் தேவை
ஒரு மனிதன் சராசரியாக தனது வாழ்நாளில் ஒரு நாளுக்கு 135 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 3-5 லிட்டர் தண்ணீர் குடிக்கவும், 5-15 லிட்டர் குளிக்கவும், 15-25லிட்டர் துவைக்கவும், சுத்தம் செய்யவும், 25-30 லிட்டர் கழிப்பறை மற்றும் பிற உபயோகத்திற்கும், 30-40 லிட்டர் தோட்ட பராமரிப்புக்கும் என்று பயன்படுத்தப்படுகிறது.
மாசுகட்டுப்பாடு வாரிய விதிகள்
கழிவுநீர்களில் மாசுக்கட்டுப்பாடு வரையறைபடி, கீழ்க்கண்ட அளவில் கழிவுநீர் சுத்திகரிப்பு அவசியம். இதில் பி.எச்:5.59, டி.எஸ்.எஸ்-30, பி.ஓ.டி-30 என சுத்திகரிப்பு செய்வதால் கழிவுநீர் நண்ணீருக்கு நிகராக அமைந்துவிடும். கழிவுநீரினை பல்வேறு வகையான சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு மேற்கண்ட நிலையை அடையும் வரை சுத்திகரிக்கப்பட வேண்டும். நவீன முறையை கையாண்டால் அவற்றை குளிப்பதற்கே உபயோகம் செய்யலாம்.
65 சதவீதம் மழைநீர் கடலில் கலக்கிறது
மழைக் காலங்களில் இந்தியாவில் அதிகளவு மழை பெய்யும். ஆனால் சேமிப்பு வரம்புகள் காரணமாக இந்த நீரில் 35 சதவீதத்திற்கு குறைவான நீரே சேமித்து பயன்படுத்தப்படுகிறது. சேமிப்பு வசதிகள் இல்லாததால் 65 சதவீதம் மழை நீர் கடலில் கலக்கிறது. இந்திய நீர்ப்பாசன நீர் வள மேம்பாட்டு ஆணையத்தின் கூற்றுப்படி, நாம் எதிர்கொள்ளும் நீர்ப் பற்றாக்குறை பிரச்னையானது, நீரின் பற்றாக்குறையால் ஏற்படுவது அல்ல, அதற்கு மழை நீரை வீணாக்குவது மற்றும் சேமிக்காததே காரணம் என்று அறிவித்துள்ளனர். தண்ணீரை அதிகளவு வீணாக்குவதில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது என்று ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.