பழவேற்காட்டில் மீன் வியாபாரியொருவரின் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளைக் பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பெரிய தெருவில் வசிப்பவர் மகிமை ராஜ் (60). மீன் வியாபாரம் செய்து வரும் இவருது வீட்டில் நேற்று நள்ளிரவில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தாருடன் எழுந்து வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்களும், ஒரு காரும் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து உடனடியாக திருப்பாலைவனம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் வருவதற்குள் வாகனங்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாயின. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வாகனங்கள் எரிந்த இடத்தில் பீர் பாட்டிலும் அதன் சில்லுகளும் கிடந்ததால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து மகிமைராஜ் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM