காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். இன்று காலை உஜ்ஜைனில் அவர் மேற்கொண்ட யாத்திரையின்போது உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் இணைந்து கொண்டனர்.
இன்று யாத்திரையின் 83வது நாளாகும். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ராகுல் காந்தி கன்னியகுமாரியில் இருந்து யாத்திரையை தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து யாத்திரையை தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று காலை உஜ்ஜைன் நகரில் யாத்திரையில் ஈடுபட்ட அவருடன் உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் இணைந்து கொண்டனர்.
இது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
ये लहर समुद्र सी…#BharatJodoYatra pic.twitter.com/kzDmTeQPqQ
— Congress (@INCIndia) December 1, 2022
அண்மையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறித்து போட்டி தேர்வுக் குழு தலைவர் நடாவ் லேபிட் கூறிய கருத்து பெரும் சர்ச்சையான நிலையில், அவருக்கு ஆதரவுக்குரல் கொடுத்திருந்தவர் தான் இந்த பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த உலகுக்கே இந்த விஷயம் இப்போது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது” என்று பதிவிட்டுள்ளார். இயக்குநர் நகோ லாபிடின் கருத்தை ஆதரித்து அவர் இந்தக் கருத்தைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.