தூத்துக்குடி, சின்னக்கண்ணுபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் இரண்டு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மீது தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில் 8 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் சினக்கண்ணுபுரம் முட்புதரில் உடலில் பல காயங்களுடன் இறந்து கிடந்தார். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ஜெயக்குமார் ஒரு திருட்டு பைக்கினை அப்பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு ரூ.5,000-க்கு விற்பனை செய்திருக்கிறார். ஆனால், அந்த பைக்கின் உரிமையாளரான மற்றொரு சரவணன் என்பவர் பைக்கினை வாங்கிய சரவணனின் வீட்டிற்குச் சென்று எடுத்துச் சென்றுவிட்டாராம்.
இதனையடுத்து சரவணன், தன் தந்தை முருகனுடன் சென்று ஜெயக்குமாரிடம் ரூ.5,000 பணத்தைக் கேட்டிருக்கிறார். அப்போது சரவணனுக்கும், ஜெயக்குமாருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. சரவணனும் அவரின் தந்தை முருகனும் சேர்ந்து ஜெயக்குமாரை அடித்து கீழே தள்ளியிருக்கின்றனர். இதில், அவர் உயிரிழந்துவிட்டார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக சரவணன், அவரின் தந்தை முருகன் ஆகியோரை சிப்காட் காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அன்னை தெரசா நகரில் பைக்கில் வந்து கொண்டிருந்த எலக்ட்ரீசியன் பெரியநாயகம் என்பவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் பிராய்லர் கோழிக்கடையில் வேலை செய்து வந்த பாலமுருகன் என்ற ஊழியர் கடையில் டியூப் லைட் சுவிட்ச்சை அழுத்திய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அந்த பிராய்லர் கடைக்கு பெரியநாயகம்தான் வயரிங் வேலை செய்திருக்கிறார்.
சரியாக வயரிங் வேலை செய்யாததாலும், வேலையில் அவருடைய அஜாக்கிரதையாலும்தான் பாலமுருகன் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து பாலமுருகனின் உறவினர்கள் பெரிய நாயகத்திடம் கேட்டதற்கு அவர் பொறுப்பற்ற முறையில் பதில் கூறியிருக்கிறார். இதனால், வாய்த்தகராறு ஏற்பட்டு அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி வைத்திருக்கின்றனர். பாலமுருகனின் இறப்பிற்கு பழி தீர்க்கும் நடவடிக்கையாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் கூறுகிறார்கள். இது தொடர்பாக கொலையாளிகளை தேடி வருகிறார்கள். தூத்துக்குடியில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலைச் சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.