அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளை முன்னிட்டு டிசம்பர் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறும் பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர்
வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் திசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் டிசம்பர் 10 – 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்புக்கான பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளன! அறிவியல் உதவியாளர் பணிக்கு அடிப்படைத் தகுதி பி.எஸ்சி இயற்பியல் பட்டம் ஆகும். அதனால், எம்.எஸ்சி இயற்பியல் படிப்பவர்கள் இந்த பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அதே நாட்களில் பல்கலை. தேர்வுகளும் நடப்பதால் ஒரு தேர்வை எழுத முடியாத நிலை உருவாகியுள்ளது!
2017-ஆம் ஆண்டில் 1165 அறிவியல் உதவியாளர் பணிக்கு நடைபெற்ற தேர்வில் தமிழகத்திலிருந்து ஒருவர் மட்டும் தேர்ச்சி பெற்றார். நடப்பாண்டின் தேர்வை அதிக எண்ணிக்கையிலானவர்கள் எழுதினால் தான், தமிழகத்திலிருந்து அதிகம் பேர் வானிலை ஆய்வுத்துறை பணிக்கு செல்ல முடியும்! அதற்கு பல்கலைக்கழகத் தேர்வுகள் தடையாக இருக்கக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு போட்டித் தேர்வு நடைபெறும் டிசம்பர் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கும் பல்கலைக்கழகத் தேர்வுகளை மட்டும் ஒத்திவைக்க தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆணையிட வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சுங்குவார்சத்திரத்தில் நேற்று நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஆன்-லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும். ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த நான்கைந்து ஆண்டுகளில், 85 பேருக்கும் மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் பயன்பாடில்லாத அரசுக்கு சொந்தமான 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் அமைக்கஅரசு ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் போதை பொருள் விற்பனை போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை அதிகாரிகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.