ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் பெயர் அடிபடும் சூழலில் அவர் பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று அளித்தப் பேட்டியில், “ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கப்போகிறது என்றால் அங்கே முதலில் அமலாக்கத் துறை வரும் பின்னர் பிரதமர் மோடி வருவார். அமலாக்கத் துறையும், சிபிஐயும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு எதிராக இப்போது திருப்பிவிடப்பட்டுள்ளன. நீங்கள் இதுபோன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு தேர்தலை வெல்ல முடியாது என்பதை மட்டும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக முயன்று வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் பாஜக 9 மாநிலங்களை நிலைகுலையச் செய்துள்ளது. அதேபோல் தெலங்கானாவிலும் செய்யவே பாஜக முயல்கிறது. பாஜக எங்களை சிறையில் அடைக்கலாம். ஆனால் நாங்கள் அப்போதும் பாஜகவின் தோல்விகளை பொய்களை வெளிக்கொண்டு வருவோம். தெலங்கானாவில் டிஆர்எஸ் ஆட்சி சுமுகமாக நடைபெறுகிறது. இதனை கவிழ்க்க வேண்டும் என்று பாஜக சதி செய்கிறது. அந்த சதியை நாங்கள் மக்களுக்கு அம்பலப்படுத்திவிட்டோம். மக்களும் அதனை உணர்ந்துவிட்டனர்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 8 ஆண்டுகளில் 9 மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி பாஜக ஆட்சி அமைத்துள்ளது. அதனால் ஒரு குழந்தைக்குக் கூட தெரியும் முதலில் ஈடி (அமலாக்கத்துறை) வரும் அப்புறம் மோடி வருவார் என்பது” என்றார்.
கவிதா பெயர் அடிபடக் காரணம் என்ன? டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக அமலாக்கப்பிரிவு குற்றஞ்சாட்டி இருக்கிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு ஏகபோக கவனிப்புகள் நடப்பதாக அவ்வப்போது பாஜக வீடியோ வெளியிட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் சிசோடியாவும் இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சிபிஐ ரெய்டுகளுக்குப் பின்னர் சிசோடியாவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இப்போது இந்த ஊழல் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு தனித்தனியாக விசாரித்து வருகிறது.
இந்தச் சூழலில்தான் அமலாக்கப்பிரிவு இந்த ஊழல் தொடர்பாக அமித் அரோரா என்பவரை கைது செய்து செய்தது. அமலாக்கப்பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், `குருகிராமில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் அமித் அரோரா தனது வாக்குமூலத்தில், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்த சவுத் குரூப்பில் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா மிகவும் முக்கியமான நபர்” என்று தெரிவித்தார். கவிதா தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ் மகள் மட்டுமல்ல கவிதா சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.
ஏற்கனவே சந்திரசேகர் ராவ் பாஜகவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இதனால் தான் அமலாக்கப்பிரிவு சந்திரசேகர் ராவ் மகளை டெல்லி மதுபானக்கொள்கை ஊழலில் சேர்த்திருப்பதாக அக்கட்சி வட்டாரம் கூறிவந்த நிலையில் சம்பந்தப்பட்ட கவிதாவே தற்போது நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார்.