புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோயில் இன்று பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. யானை லட்சுமி கோயில் முன்பு நின்ற இடத்தில் பக்தர்கள் பூக்கள் வைத்து அன்பை வெளிப்படுத்தினர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி நேற்று உயிர் இழந்தது. உடல் கூறு ஆய்வு இரண்டு மணி நேரம் நடந்தது. அப்போது யானையின் தந்தங்கள் எடுக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதையடுத்து யானை லட்சுமி உடல் குழியில் இறக்கப்பட்டு அதில் 50 மூட்டைகள் உப்பு, விபூதி உள்ளிட்டவை தெளிக்கப்பட்டன.
நிகழ்வுகள் அனைத்தும் நேற்று இரவு 8 மணி அளவில் நிறைவடைந்தது. இந்நிகழ்வுகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர் அமைச்சர்களில் லட்சுமி நாராயணன் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்ற சூழலில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. அதேபோல் அமைச்சர்களில் நமச்சிவாயம், சந்திர பிரியங்கா, சாய் சரவணகுமார் பங்கேற்கவில்லை. நிகழ்வுகளில் பல எம்எல்ஏக்களும் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் இன்று காலை ஆகம விதிகளின்படி பூஜை முடிந்த பிறகு மணக்குள விநாயகர் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. மணக்குள விநாயகர் கோவில் முன்பு யானை நின்று ஆசி வழங்கிய இடத்தில் ஏராளமான பக்தர்கள் பூக்களை காணிக்கையாக வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். யானை லட்சுமி அடக்கம் செய்யப்பட்ட இடத்திலும் பூக்கள் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில்: “யானை லட்சுமி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைப்போம். கோயில் நிர்வாகம் தரப்பில் பேசி முடிவு எடுப்போம். கோயிலுக்கு யானை வாங்கி தருவதாக பாஜக எம்எல்ஏ ஜான் குமார் தெரிவித்ததாக கேட்கிறீர்கள். அத்துடன் உரிமத்தையும் வாங்கி தருவாரா? யானை தொடர்பாக முதல்வர், கோயில் நிர்வாகம் தரப்பில் பேசி முடிவு எடுப்போம்” என்று அமைச்சர் கூறினார்.