நீடாமங்கலம்: நீடாமங்கலம் வழியாக செல்லும் கோவை- மன்னார்குடி செம்மொழி விரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் இரட்டை இன்ஜின் பொருத்தி சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளதை வரவேற்றுள்ள பொதுமக்கள் விரைவில் நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று ரயில்வேதுறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக கோவைக்கு செம்மொழி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
ஒரு இன்ஜினுடன் இயக்கப்பட்டு வரும் இந்த விரைவு ரயில் நாள்தோறும் கோவையிலிருந்து புறப்படும் விரைவில் காலை 6.30 மணியளவில் நீடாமங்கலம் வந்து இன்ஜின் திசை மாற்றி மன்னார்குடிக்கும், மறு மார்க்கத்தில் மன்னார்குடியிலிருந்து இரவு 8.40 மணியளவில் நீடாமங்கலம் வந்து இன்ஜின் திசை மாற்றி இரவு நேரத்தில் கோவைக்கும் புறப்பட்டு செல்லும். இந்த இன்ஜின் திசைமாற்றும் பணி முடிந்து ரயில் புறப்பட 45 நிமிடம் வரை ஆகும். இந்த பணி காரணமாக நீடாமங்கலத்தில் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் நெரிசல் நாள்தோறும் பாதிப்பு ஏற்படும்.
இதனால் ஏற்படும் பிச்னைகளுக்கு தீர்வுகாண கோவை செம்மொழி விரைவு ரயில் இரட்டை என்ஜினுடன் இயக்க ரயில்வேதுறை நடவடிக்கை எடுத்தது. இதன்படி நேற்றுமுன்தினம் 29ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவை செம்மொழி விரைவுரயில் இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டமாக மன்னார்குடி வந்து சென்றது. இந்நிலையில் நேற்று காலை 6.27 மணிக்கு ஒரு இன்ஜின் பொருத்தப்பட்டு நீடாமங்கலத்திற்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பின்னர் இன்ஜின் திசைமாற்றப்பட்டு ரயில் மன்னார்குடி புறப்பட்டு சென்றது. இரட்டை இன்ஜின் பயணம் விரைவில் நிரந்தரமாக தொடங்குமா? என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.