மும்பை :“மும்பை – காந்தி நகர் இடையே இயங்கும் ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் பாதையில் 264 கோடி ரூபாய் செலவில் தடுப்பு வேலி அமைக்கப்படும்,” என, மேற்கு ரயில்வே பொதுமேலாளர் அசோக் குமார் மிஸ்ரா கூறினார்.
மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இருந்து குஜராத் மாநில தலைநகர் காந்தி நகருக்கு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை, கடந்த செப்., 30ல் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த ரயில் பாதையை ஒட்டி ஆங்காங்கே மாடுகள் மேய்வதால், அடிக்கடி ரயிலில் மோதி விடுகின்றன. ரயில் சேவை துவக்கப்பட்ட இரு மாதங்களில், நான்கு முறை மாடுகள் மீது மோதி ரயிலின் முகப்பு சேதம் அடைந்தது.
இந்நிலையில், மேற்கு ரயில்வே பொதுமேலாளர் அசோக் குமார் மிஸ்ரா கூறியதாவது:
வந்தே பாரத் ரயில் பாதையில் மாடுகள் மேய்வதை தடுக்க தண்டவாளத்தின் இருபக்கமும் தடுப்பு வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை – காந்தி நகர் இடையே உள்ள 620 கி.மீ., துாரத்துக்கும், 264 கோடி செலவில் தடுப்பு வேலி அமைக்க ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளது.இதற்கிடையே, ரயில்வே ஊழியர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை ரயில் பாதைக்குள் வராமல் பாதுகாக்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2019ல் நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை திட்டம் துவக்கப்பட்டது. முதல் சேவை புதுடில்லி – வாரணாசி இடையே துவங்கியது.
இதையடுத்து, புதுடில்லி – -ஜம்மு காஷ்மீர், மும்பை – காந்தி நகர், புதுடில்லி – ஹிமாச்சல பிரதேசத்தின் உனா மற்றும் சென்னை – கர்நாடக மாநிலத்தின் மைசூரூ என ஐந்து வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நகரங்களில் துவக்குவதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement