ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட நாட்களாக எழுந்து வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராக இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதனை ரத்து செய்தது.
இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என திமுக அரசு சட்டப்பேரவையில் அறிவித்தது. இது தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் குழு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். இக்குழுவினர் தங்களது பரிந்துரைகளை அறிக்கையாக முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பித்தனர்.
இதையடுத்து, இந்த பரிந்துரைகள் தொடர்பாக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்ட மசோதாவிற்கு, தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்ததால் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையிலான நிரந்தர சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது.
அவசரச் சட்டத்தை போன்றே இந்த நிரந்தர மசோதாவுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசரச் சட்டம் நவம்பர் 27ஆம் தேதியுடன் காலாவதியாகி விட்டது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால், வழக்கம் போல் ஆன்லைன் சூதாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் உயிரிழப்புகளும் அரங்கேறி வருகின்றன.
முன்னதாக, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில், அதற்கு விளக்கம் அளித்து அடுத்த 24 மணி நேரத்தில் விளக்கக் கடிதத்தையும் தமிழக அரசு அனுப்பி வைத்தது. மேலும், இதுதொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்டதாகவும், ஆனால், சந்திப்பதற்கான நேரத்தை ஆளுநர் ஒதுக்கவில்லை எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்து விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்லைன் சூதாட்ட ரம்மியை தடை செய்யுமாறு ஆளுநரை வலியுறுத்தியுள்ளதாகவும், சில சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு ஒப்புதல் தருவதாக அவர் தெரிவித்ததாகவும் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக அரசாணை வெளியிடவில்லை என திமுக அரசு மீது பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அமைச்சர் ரகுபதியின் பேட்டி வீடியோவை பகிர்ந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் ரகுபதியே ஒப்புக் கொண்டுள்ளார். அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன்?” என கேள்வி எழுப்பியிருந்தார். தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி தமிழக ஆளுநரின் மேல் திமுக பழி போடுவதாகவும், உயிர் பலிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் விமர்சித்திருந்தார்.
“தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தார். ஆனால், ஓர் அரசாணைக்கூட தமிழக அரசு வெளியிடவில்லை. அவசர சட்ட மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட்ட பின்னர் 6 மாத காலமாக ஆன்லைன் ரம்மியை தடை செய்யாமல் இருந்தது என்பதை விளக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. குறிப்பாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதிக்கு உள்ளது.” என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததில் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என தெரிவித்தார். ஆனால், “அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய தேதிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தேதிக்கும் இடையே 12 நாட்கள் இடைவெளி இருந்தது. அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளது. இதற்கு திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரும், முதலமைச்சர் ஆகியோரே பொறுப்பு.” என அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை அரசாணை தொடர்பான பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “ஆன்லைன் சூதாட்ட மசோதா விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கவில்லை என அண்ணாமலை கூறுவதற்கு முன்பாகவே, நானே இந்த விவகாரத்தில் அரசானை பிறப்பிக்கவில்லை என்பதை சொல்லி இருந்தேன். அதற்கான காரணத்தை பாதி மறைத்து அண்ணாமலை கூறியுள்ளார். அவசர சட்டம் அக்டோபர் 3ஆம் தேதி பிறப்பிக்கப்படுகிறது அன்று மாலை ஆளுநர் கையெழுத்திட்டார். 4ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. 5ஆம் தேதி சட்டமன்றம் கூடும் தேதி அறிவிக்கப்பட்டது,. சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அதன் பின்பு அரசாணை வெளியிட முடியாது. அது மட்டுமின்றி அரசாணை வெளியிட்டால் இதற்கு யாரேனும் தடை கோரி விடுவார்கள் என்பதாலும் சட்டமன்றத்திலேயே இதற்கான ஒப்புதலை பெற்று விடலாம் என்பதாலும்தான் அரசாணை வெளியிடவில்லை. வேறு எந்த காரணமும் இல்லை. அதுமட்டுமின்றி இந்தியாவிற்கே இது ஒரு வித்தியாசமான சட்டம். ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குமுறைபடுத்துதல் சட்டத்தை சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைக் கேட்டு நாங்கள் கொண்டு வந்தோம். இதற்கான அனைத்து விதமான முறையான விதிமுறைகளை பின்பற்றி தான் சட்டமும் இயற்றப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.