இந்தியாவில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் கொலிஜியம் பரிந்துரையின்படி நடைபெற்று வருகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றிருக்கும் நீதிபதிகள் குழு புதிய நீதிபதிகளைத் தேர்வு செய்வது, பணியிட மாற்றம் செய்வது போன்ற பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பும். இந்த பரிந்துரையின் அடிப்படையில், மத்திய சட்டத் துறை அமைச்சகம் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று அதற்கான அறிவிப்பை வெளியிடும். கொலிஜியத்தின் பரிந்துரைகளை நிராகரிக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், சுயேச்சையாக புதிய நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது.
இந்த நடைமுறையில், மாற்றம் ஏற்படுத்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் கொண்டுவரப்பட்டது. ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு இந்த ஆணையத்தையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், டெல்லியில் எல்.எம்.சிங்வி நினைவு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கலந்துகொண்டார். அதில், குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் உரையின்போது, “நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
மக்களவையில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது ஒரு உறுப்பினர் மட்டுமே வாக்களிக்கவில்லை. மற்ற அனைவரும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் மிகவும் முக்கிய பிரச்னை. இதுபோன்ற நிகழ்வு வேறு எங்கும் நடந்தது உண்டா என நீதித்துறை உயர் அதிகாரிகள், அறிவார்ந்த நபர்கள் சிந்திக்க வேண்டும்” என்றார்.
கொலிஜியம் தொடர்பான குடியரசுத் துணைத்தலைவரின் இந்த பேச்சு அரசியல், நீதித் துறை வட்டாரத்தில் பெருபொருளாகியிருக்கிறது.