டேராடூன்: உத்தராகண்டில் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து பொது சிவில் சட்டம் தொடர்பாக மக்களின் கருத்தறிய உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ்தேசாய் தலைமையில் 5 பேர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு கடந்த 6 மாதங்களாக பொதுமக்களை சந்தித்து அவர் களின் கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறது. இதுவரை சுமார் 2.5 லட்சம் பேர் தங்களது பரிந்துரைகளை குழுவிடம் சமர்ப் பித்துள்ளனர்.
மக்கள் தொகை அதிகரித்து வருவதால் பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியாக குடும்பகட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று பெரும்பாலானோர் பரிந்துரை செய்துள்ளனர்.
பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வேண்டும். பூர்வீக சொத்துகளில் பெண் களுக்கு சரிசமமாக சொத்துகள் வழங்கப்பட வேண்டும். திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வோர் முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
6 மாதங்களில் அறிக்கை: உத்தராகண்ட் பொது சிவில் சட்ட குழு 6 மாதங்களில் அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் வலியுறுத்தினார். இதை ஏற்றுக் கொண்ட உத்தர பிரதேச முதல்வர் புஷ்கர் சிங் தாமி, குழுவின் அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி அடுத்த ஆண்டு மே 27-ம் தேதிக்குள் குழுவின் சார்பில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதன் அடிப்படையில் உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமல் செய்யப்படும் என்று மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் தொழில் நடத்துதல், கொடுக்கல், வாங்கல், வாடகை, சொத்து விற்பனை, குற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றில் பொதுவான சட்டங்களே பின்பற்றப்படுகின்றன.
ஆனால் திருமணம், விவாகரத்து, சொத்தில் வாரிசு களுக்கு பங்கு, தத்தெடுத்தல் ஆகிய விவகாரங்களில் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன. இந்த நிலையை மாற்றி பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.