டோல் டேக்ஸ் என்பது நாட்டில் எங்கும் அதிவேக நெடுஞ்சாலை அல்லது நெடுஞ்சாலையைப் பயன்படுத்த மக்கள் செலுத்தும் தொகையாகும். பல்வேறு மாநிலங்களுக்கு இடையே சிறந்த இணைப்பை உருவாக்குவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. டோல் வரி தொடர்பான புதிய விதிகளை அரசு விரைவில் கொண்டு வரக் கூடும். 2024-ம் ஆண்டுக்குள் நாட்டில் 26 பசுமை விரைவுச் சாலைகள் தயாராகும் என்றும், சாலைகளின் தரங்களில், அமெரிக்காவுக்கு இணையாக இந்தியா இருக்கும் என்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன் மூலம், நெடுஞ்சாலை வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் மிக எளிதாக பயணம் செய்ய முடியும், இதுமட்டுமின்றி, டோல் வரி விதிகளிலும் மாற்றம் செய்யப்படலாம்.
மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
வரும் நாட்களில் டோல் வரி வசூலிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தலாம் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். டோல் வரியை வசூலிக்க இரண்டு வழிகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக நிதின் கட்கரி கூறினார். முதல் விருப்பம் கார்களில் ‘ஜிபிஎஸ்’ அமைப்பை நிறுவுவதாகும், இரண்டாவது விருப்பம் நவீன நம்பர் பிளேட்டுகளுடன் தொடர்புடையது. இது கார் பயனாளர்களுக்கு பெரும் வசதியை அளிக்கும்.
தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை
இதுவரை நாட்டில் டோல் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான விதிமுறை எதுவும் இல்லை என்றும், இதற்கான அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் கூறினார். ஆனால், வரும் காலங்களில் இதற்கான புதிய மசோதாவை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த மசோதாவின் கீழ், ஒரு பயணி டோல் வரி செலுத்தவில்லை என்றால், அவர் தண்டனை அல்லது அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
புதிய விதிகள் வகுக்கப்படும்
நிதின் கட்கரி கூறுகையில், சில காலமாக புதிய நம்பர் பிளேட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான தேர்வு பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். தற்போது சுங்கச்சாவடியில் ஒருவர் 10 கிலோமீட்டர் தூரம் கூட பயணம் செய்தால் 75 கிலோமீட்டர் கட்டணம் செலுத்த வேண்டும், ஆனால் புதிய முறையில் பயணம் செய்யும் தூரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். புதிய முறை அமலுக்கு வந்த பிறகு, சுங்கச்சாவடிகளில் கூட்டம் இருக்காது, போக்குவரத்தும் பாதிக்கப்படாது என்றார். இதன் மூலம் பயணிகளுக்கு வசதி கிடைப்பதுடன், சுங்கச்சாவடியில் செலவழிக்கும் தேவையற்ற நேரமும் மிச்ச்சமாகும்.
NHAI நஷ்டத்தில் இல்லை
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) எந்தவிதமான நிதி நெருக்கடியையும் சந்திக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கூறினார். NHAI நிதி நிலை முற்றிலும் நன்றாக உள்ளது மற்றும் அமைச்சகத்திடம் பணத்திற்கு பஞ்சம் இல்லை. கடந்த காலங்களில் இரண்டு வங்கிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு குறைந்த கட்டணத்தில் கடன் வழங்கியதாக நிதின் கட்கரி மேலும் கூறினார்.