விடுதலை படப்பிடிப்பில் விபத்து – தயாரிப்பு நிறுவனம் சொல்வது என்ன?

இயக்குநர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கிவருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.  இந்தப் படமானது இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. வெற்றிமாறனும், சூரியும் முதல்முதலாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி ஜெயமோகனின் கதையை எந்த விதத்தில் வெற்றிமாறன் காட்சிப்படுத்தியிர்க்கிறார் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. கடந்த 3ஆம் தேதி சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சுரேஷ் என்ற சண்டை கலைஞர் உயிரிழந்தார். ரோப் கயிறு அறுந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். இவரின் இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து விடுதலை பட தயாரிப்பு நிறுவனம் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சண்டை கலைஞர் சுரேஷ் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தது மிகப்பெரிய வருத்தத்தையும், வலியையும் ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சை போன்ற முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், சுரேஷை காப்பாற்ற முடியாதது மிகப்பெரிய இழப்பு.

இந்த சம்பவம் எங்களது இதயத்தில் மாறாத வலியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த சண்டை கலைஞர் சுரேஷ் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.