பெங்களூரு, : முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில், துமகூரில் நடக்கும் ம.ஜ.த.,வின் பஞ்சரத்ன ரத யாத்திரைக்கு, மக்களிடம் கிடைத்த வரவேற்பு, காங்., மூத்த தலைவர் பரமேஸ்வரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் ம.ஜ.த., மாவட்ட வாரியாக, பஞ்சரத்ன ரத யாத்திரை நடத்தி வருகிறது. தற்போது, துமகூரில் ரத யாத்திரை நடந்து வருகிறது. இதற்கு மக்களிடம், நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.
கொரட்டகரேவில், குமாரசாமி தலைமையில் நடந்த பஞ்சரத்ன ரத யாத்திரைக்கு, பெருமளவில் மக்கள் திரண்டனர். இது காங்., மூத்த தலைவர் பரமேஸ்வரை, கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் இந்த தொகுதியில் அவர், காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்க தயாராகி வருகிறார்.
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு பாதுகாப்பான தொகுதி கிடைக்கா விட்டால், வருணா தொகுதியை விட்டுத்தர அவரது மகன் எதீந்திரா தயாராக இருக்கிறார். ஆனால் பரமேஸ்வருக்கு, மாற்று தொகுதி கிடையாது. கொரட்டகரேவில் மட்டுமே போட்டியிட முடியும்.
இந்நிலையில், தொகுதிக்கு வந்த குமாரசாமிக்கு, பெண்கள், மூத்த குடிமக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். கடலைக்காய், கொப்பரை மாலை அணிவித்தனர். இம்முறை அவர் முதல்வராக வேண்டும் என, ஆசி கூறினர். குமாரசாமியை பார்ப்பதற்காகவே, அதிகாலை 2:00 மணி வரை, தோவினகரே கிராமத்தினர் காத்திருந்தனர்.
கொரட்டகரேவில், அவ்வளவாக அறிமுகம் இல்லாத ம.ஜ.த.,வின் சுதாகர் லால், 2013ல் தலித் தலைவர் பரமேஸ்வரை தோற்கடித்து, பெரிய தலைவராக உருவானார். தற்போது குமாரசாமியின் பிரசாரம், சுதாகர் லாலின் பலத்தை அதிகரித்துள்ளது. இது, பரமேஸ்வருக்கு பயத்தை ஏற்படுத்திஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement