கே.பாக்யராஜின் `இன்று போய் நாளை வா': டியர் 2கே கிட்ஸ், 80களின் காதல் எப்படியிருந்தது தெரியுமா?

80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – `இன்று போய் நாளை வா’.

‘திரைக்கதை மன்னர்’ என்று பெயர் எடுத்திருந்த பாக்யராஜ், பெரிய மெனக்கெடல் ஏதுமின்றி இடது கையால் எழுதியது இந்தப் படத்திற்காக இருக்கலாம். படம் முழுவதும் அப்படியொரு லாஜிக் இல்லாத மேஜிக் நிகழ்ந்திருக்கும். இந்தப் படத்தின் திரைக்கதையை ஒரே இரவில் அவர் எழுதி முடித்தார் என்றொரு தகவல் உண்டு. எண்பதுகளின் இளைஞர்களின் மனநிலையை, பெண்களை சைட் அடிப்பதற்காக அவர்கள் செய்யும் சேட்டைகளும் மிக இயல்பான திரைமொழியில் உருவாக்கிய பாக்யராஜ், ‘இந்தப் படத்தின் நோக்கம் பொழுதுபோக்கு மட்டுமே’ என்று டைட்டில் கார்டில் முன்ஜாமீன் வாங்கியிருப்பார்.

ஒரு பெண்ணிடம் அறிமுகமான அடுத்த நிமிடத்திலேயே ‘சாட்டிங்’ ‘பிளிர்ட்டிங்’ என்பது 2கே கிட்ஸுக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் எண்பதுகளின் இளைஞர்களுக்கு அப்படியல்ல. ஒரு பெண்ணிடம் பேச முற்படுவதற்காக ‘டைம் என்னங்க ஆச்சு?’ என்று கேட்பதற்குள் வாய் உலர்ந்து, உடல் வியர்த்து, கால்கள் நடுங்கி விடும். எனவே தொலைவில் நின்று தாழ்வுமனப்பான்மையுடன் பெண்களை ரசித்தே காலத்தைக் கடத்திவிட்டார்கள். ஆனால் தங்களுக்குள் ‘மச்சி… அவ என் ஆளு. நீ குறுக்கே வராத’ என்று பங்கு போட்டுக் கொள்ளும் அபத்தத்தையும் செய்வார்கள்.

இன்று போய் நாளை வா

‘ஹே… எப்புட்றா அந்தப் பொண்ணை கரெக்ட் பண்றது?’

இப்படிப்பட்ட மூன்று இளைஞர்களின் கதைதான் இது. கோயம்புத்தூரின் சிறுநகரத்தைப் பின்னணியாகக் கொண்டு இயங்கும் எளிமையான நகைச்சுவை, படம் முழுவதும் பரவியிருந்தது. ஒருவன் பணக்காரன், பார்க்கக் கவர்ச்சியாக இருப்பவன், கல்லூரியில் படிப்பவன். அடுத்தவன் ஃபேக்டரியில் வேலை செய்பவன், மூன்றாமவன் வேலை வெட்டிக்குச் செல்லாமல் அம்மாவின் பாசத்தில் வீட்டோடு சோம்பேறியாக இருப்பவன் என்று ஒவ்வொரு இளைஞனுக்கும் பக்காவான கேரக்ட்டர் ஸ்க்ட்ச்சை வரைந்து வைத்திருந்தார் பாக்யராஜ். ஆனால் இந்த மூவரின் பயணமும் எங்கே இணையும் என்றால் பெண்களை சைட் அடிப்பது, எப்படியாவது ஒரு காதலைச் சம்பாதிப்பது.

பாக்யராஜின் வீட்டிற்கு எதிரே புதிதாக ஒரு குடும்பம் குடிவரும். அந்தக் குடும்பத்தின் தாத்தா ஒரு குஸ்தி வாத்தியார். காமா பயில்வானின் ஒரே சிஷ்யன் சோமா பயில்வான். தந்தை இந்தி பண்டிட். இதர விஷயங்களில் வேலைக்கு ஆக மாட்டார் என்றாலும் படிப்பு சொல்லித் தரும் விஷயத்தில் மட்டும் கறார். இப்போது முக்கியமான கேரக்ட்டருக்கு வருவோம். ஆம், பதினெட்டு வயதில் இருக்கும் பெண் ஜெயா. அந்த வயதுக்கேயுரிய வெகுளித்தனம் இருந்தாலும் அடிப்படையில் புத்திசாலி. இப்படி இந்தக் குடும்பத்தின் கேரக்ட்டர்களும் கச்சிதமாக வரையப்பட்டிருக்கும்.

அந்த இளம் பெண்ணின் காதலை யார் அடைவது என்று மூன்று இளைஞர்களுக்குள் போட்டி நிகழும். கடைசியில் யார் ஜெயித்தது என்பதுதான் இதன் திரைக்கதை.

பாக்யராஜின் கச்சிதமான ‘கேரக்ட்டர்’ ஸ்கெட்ச்

பணக்கார கல்லூரி மாணவன் ராஜேந்திரனாக ஜி.ராம்லி நடித்திருந்தார். இவரை கல்லூரி மாணவன் என்று ஒப்புக் கொள்வது சிரமம்தான் என்றாலும் தன் பாத்திரத்தை இயன்ற வரையில் சிறப்பாகக் கையாண்டிருந்தார். பண்டிட் இந்தி சொல்லித் தரும் போது, பாட்டியின் மடியில் சாய்ந்து கொண்டே லட்டை மென்று கொண்டு தப்பும் தவறுமாகச் சொல்லும் இடம் எவராலும் மறக்க முடியாத காட்சி.

இன்று போய் நாளை வா

ஆம், ‘ஏக் காவ் மே ஏக் கிஸான் ரெஹ்தா தா’ என்கிற புகழ்பெற்ற காமெடி வசனத்தை இன்றும் நினைவில் வைத்திருப்பவர்கள் பலர். ‘ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தாராம்’ என்பதுதான் இதன் பொருள். ‘ரெஹ்தா தா’ என்பதை ‘ரகு தாத்தா’ என்று ராஜேந்திரன் குழறலாகச் சொல்ல, பல்லைக் கடித்துக் கொண்டு திரும்பத் திரும்பத் திருத்துவார் ஆசிரியர். இந்தி எதிர்ப்பு போரட்டம் அழுத்தமாக இருந்த அப்போதைய சூழலில், இந்த நகைச்சுவை வசனம் நிறைய கவனிக்கப்பட்டது.

அடுத்த நண்பர் வெங்கட்டாக நடித்தவர் பழனிச்சாமி. இவரை பாக்யராஜின் பல படங்களில் பார்த்திருக்கலாம். குஸ்தி வாத்தியாரிடம் தேகப்பயிற்சி கற்கும் சாக்கில் அந்த வீட்டிற்குள் நுழையலாம் என்பது இவரது பிளான். வாத்தியாரை சாக்கடைப் பள்ளத்தில் தள்ளி விட்டு பிறகு உதவி செய்து நல்ல பெயரை வாங்கலாம் என்று இவர் திட்டம் போட, குஸ்தி வாத்தியார் அதை அலட்சியமாக கடந்து செல்லும் காட்சியில் சிரிப்பு உத்தரவாதம். இதைப் போலவே ஆள் வைத்து அடிக்க முயல, அந்த ரவுடிகளை பந்தாடி விடுவார் குஸ்தி.

மூன்றாமவர்தான் ‘நம்மாளு’ பாக்யராஜ். இவரது கேரக்ட்டரின் பெயர் பழனிச்சாமி. அசட்டுத்தனமும் கோணங்கித்தனமும் நிறைந்த ஆரம்பக் கால கெச்சலான தோற்றத்தில் ‘விக்’ இல்லாத இயல்பான பாக்யராஜை இதில் ரசிக்க முடியும். மூன்று இளைஞர்களும் அந்த வீட்டிற்குள் நுழைய சந்தர்ப்பங்களைத் தேடுவது, உருவாக்குவது, அவற்றில் ஏற்படும் ஜாலியான பின்னடைவுகள் என்று பல காட்சிகளில் பாக்யராஜின் ‘க்யூட்டான ஐடியாக்கள்’ இருந்தன.

பாக்யராஜின் இயல்பான நகைச்சுவை

சொந்த வீட்டிற்கு ரேஷன் வாங்கித் தருவதில் கௌரவம் பார்க்கும் பாக்யராஜ், எதிர் வீட்டுப் பெண்ணை இம்ப்ரஸ் செய்வதற்காக அவர்களுக்காக ரேஷன் கடைக்குச் செல்லும் காட்சியும், சுமையோடு திரும்பும் போது எதிரில் வரும் தந்தையைக் கண்டு திகைத்து பொருள்களை குப்பைத் தொட்டியில் ஒளித்து வைப்பதும், அப்போது நிகழும் ட்விஸ்ட்டும் படு சுவாரஸ்யம். வேலை, வெட்டிக்குச் செல்லாமல், வெள்ளையும் சொள்ளையுமான ஆடையில் கூலிங் கிளாஸ் அணிந்து பெண்களைக் கண்டால் இளிக்கும் உருப்படியில்லாத இளைஞனைப் பிரமாதமாக நகலெடுத்திருந்தார் பாக்யராஜ்.

இன்று போய் நாளை வா

ஜெயா என்கிற பாத்திரத்தில் ராதிகா. வெள்ளந்தித்தனமும் கூடவே அடிப்படையான புத்திசாலித்தனமும் கலந்த கேரக்ட்டரை இயன்ற அளவிற்கு நியாயப்படுத்தியிருந்தார். ராதிகாவை பாரதிராஜா அறிமுகப்படுத்திய படத்தில் “பப்ளிமாஸ் மாதிரி இருக்கிற இந்தப் பெண்ணா ஹீரோயின்?!” என்று அப்போது கிண்டலடித்தவர் பாக்யராஜ். ஆனால் அவரே தன் படத்தில் நாயகியாக நடிக்க வைக்குமளவிற்கு ராதிகாவின் முன்னேற்றம் அமைந்தது. பிறகு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகளுள் ஒருவராக ராதிகா மிளிர்வார் என்பதை யாரும் யூகித்திருக்க மாட்டார்கள்.

காமா பயில்வானின் ஒரே சிஷ்யன் சோமா பயில்வானாக ‘கல்லாப் பெட்டி’ சிங்காரத்தின் நடிப்பு பல இடங்களில் அட்டகாசமாக அமைந்திருந்தது. (காமா பயில்வான் என்று உண்மையிலேயே ஒரு புகழ்பெற்ற மல்யுத்த வீரர் இருந்தார்). கெச்சலான தோற்றமாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பின் மூலம் பயில்வான் பாத்திரத்தை சமன் செய்திருந்தார் சிங்காரம். உரையாடலில் ஆங்கிலத்தைக் கலந்து ‘என்னா மேன் நீ…’ என்று வித்தியாசமான மாடுலேஷனில் பேசி அசத்தியிருந்தார்.

இந்தி பண்டிட்டாக ஜான் அமிர்தராஜ். ‘கடு கடு’ வாத்தியார் பாத்திரத்தை நன்றாகக் கையாண்டிருந்தார். இவர் கதை, திரைக்கதையாசிரியரும் கூட. இந்தப் படத்தின் உதவி இயக்குநர்களில் ஒருவராக இருந்தார். தவறாக உச்சரிக்கும் மாணவனிடம் பல்லை நறநறவென கடித்துக் கொண்டே தலையில் கொட்டுவதும், உறவுக்காரப் பெண் விசாரிக்கும் போது பட்டும் படாமல் பதில் சொல்வதும் என்று தனது கதாபாத்திர எல்லைக்குள் கச்சிதமாக இயங்கியிருந்தார்.

காந்திமதிக்கு இதில் சொல்லிக் கொள்ளக்கூடிய அளவிற்கு காட்சிகள் இல்லை. ராதிகாவின் அம்மா காரெக்ட்டர். ‘பழனிச்சாமிக்கு நம்ம வீட்டு குழந்தை மேல எம்பூட்டு பிரியம்’ என்று மகிழ்வதிலேயே இவரது பாத்திரம் முடிந்து விட்டது. ராதிகாவின் உறவுக்கார ‘அக்கா’வாக கண்ணாடி அணிந்து கொண்டு அறிவுஜீவி லுக்கில் நடித்தவர் வி.கே.பத்மனி. இவரும் பல பழைய திரைப்படங்களில் நடித்துள்ளார். ராதிகாவின் விடலைத்தன காதலையும் இளைஞர்களின் கோணங்கித்தனங்களையும் புரிந்து கொண்டு சரியான திசையில் வழிநடத்தும் கேரக்ட்டர்.

இன்று போய் நாளை வா

பல காட்சிகளில் அசடு வழியும் இளைஞர்கள்

ஒரு பெண்ணின் காதலை அடைவதற்காக இளைஞர்கள் என்னென்ன கிறுக்குத்தனங்களையெல்லாம் செய்வார்கள் என்பது இந்தப் படத்தின் பல இடங்களில் குறும்பான நகைச்சுவையாகப் பதிவாகியிருந்தது. வீட்டில் திருடிய கொலுசை, வாங்கிய கடனிற்காக திருப்பித் தரும் பாக்யராஜ், ‘இரு. ஒரு ஐடியா. கொஞ்ச நேரத்துல தரேன்’ என்று மறுபடியும் வாங்கிச் செல்வார். ‘இந்தக் கொலுசு உங்களுதா பாருங்க. இல்லைன்னா. போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்துடறேன். அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படறது எனக்குப் பிடிக்காது’ என்று ராதிகாவை இம்ப்ரஸ் செய்ய முயல்வார். ஆனால் அதில் நிகழும் ட்விஸ்ட்டாக ‘ஆமாம். இது எங்க பாப்பா கொலுசுதான்’ என்று ராதிகா வாங்கிக் கொள்ளும் போது விளக்கெண்ணை குடித்தது போல் பாக்யராஜின் முகம் மாறும். சிரிப்பை அள்ளக்கூடிய காட்சியிது. இதைப் போலவே, குடுகுடுப்பைக்காரரின் ஆருடம் வழியாகச் சொல்லப்படும் ‘கறுப்பு சட்டை – வெள்ளை பேண்ட்’ ஐடியா பிறகு சொதப்பலாகும் காட்சியில் பாக்யராஜின் அழுத்தமான முத்திரை பதிந்திருந்தது.

பாக்யராஜ்தான் ஹீரோ என்றாலும் மூன்று நண்பர்களுக்கும் சமமான ஸ்கிரீன் ஸ்பேஸ் தந்து திரைக்கதைக்கு நியாயம் செய்திருப்பார். ஒரு சமூகத்தின் பெயரைச் சொல்லி ‘நீங்க ரெண்டு பேரும் அந்த ஆளுங்க… ஒண்ணு சேர்ந்துடுவீங்க” என்று நண்பர்கள் பேசிக் கொள்ளும் அளவிற்கு உரையாடலில் இயல்புத்தனம் நிறைந்திருக்கும். இன்னொரு சுவாரஸ்யமான காட்சியும் உண்டு. லவ் லெட்டரைத் தருவதற்கு முன்பாக ஜெயகாந்தனின் சிறுகதையை மேற்கோள் காட்டி வார்ம்-அப் செய்யும் வெங்கட்டின் ஐடியா சுவாரஸ்யமானது. ‘முன்னாடி எனக்கு லவ் லெட்டர் தந்தவனை ரோட்டில வெச்சு செருப்பால அடிச்சேன்’ என்று ராதிகா சொல்ல, ‘ஓர் இளைஞன் தன் காதலை ரகசியமாகவும் கண்ணியமாகவும் சொல்வதற்கு காதல் கடிதத்தை விடவும் வேறு என்ன வழி இருக்க முடியும்? அந்தப் பெண்ணுக்கு விருப்பமில்லையென்றால் மறுக்கலாம். கடிதத்தை கிழித்துப் போடலாம். ஆனால் பொதுவில் வைத்து அவமானப்படுத்தலாமா?’ என்கிற ஜெயகாந்தனின் கருத்தைக் கேட்டவுடன் “ஆமால்ல… தப்பு பண்ணிட்டேன்” என்று வருந்துவார் ராதிகா. நகைச்சுவையோடு உபசேத்தையும் உறுத்தாமல் கலப்பது பாக்யராஜ் ஸ்டைல்.

மூன்று இளைஞர்களின் காதலையும் சோதிப்பதற்காக உறவுக்காரப் பெண் தரும் ஐடியா துணிச்சலானது. மற்ற இருவரும் போட்டியில் இருந்து விலகி, தங்களை இம்சை செய்த இந்தி பண்டிட்டையும் குஸ்தி வாத்தியாரையும் நையப் புடைத்து அனுப்பும் காட்சி வாய் விட்டு சிரிக்க வைப்பது. ஆனால் பாக்யராஜ் மட்டும் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ மனநிலைக்குச் சென்று விடுவார். இதில் க்ளைமாக்ஸிற்கான கூடுதல் ட்விஸ்ட்டை இணைத்ததுதான் பாக்யராஜின் புத்திசாலித்தனம்.

இன்று போய் நாளை வா

க்ளைமாக்ஸில் வரும் சிரிப்புத் திருடர்கள்

‘பாதிக்கப்பட்ட’ காதலியை சம்பந்தப்பட்டவருடன் சேர்த்து வைப்பதற்காக இவர் நடத்தும் தேடுதல்களும் அதில் நிகழும் ட்விஸ்ட்டும் சுவாரஸ்யம். சூர்ய காந்த் தலைமையில் மூன்று சிரிப்புத் திருடர்கள் இறுதியில் அறிமுகமாவார்கள். இந்தத் திருட்டுக் கூட்டத்தில் செந்திலும் ஒருவர். பெண்ணைக் கடத்துவதற்கு முன், அவர்கள் வருகிறார்களா என்று வேவு பார்ப்பதும், அந்தச் செய்தியை சறுக்கிக் கொண்டே வந்து சொல்வதும், அந்தக் களேபரத்திலும் ‘அந்தப் பொண்ணை என் பக்கத்துல உக்கார வைங்கடா’ என்று கிளுகிளுப்பு தேடுவதும் சுவாரஸ்யமான காட்சிகள்.

சிரிப்புத் திருடர்களில் இன்னொருவராக வருபவர் ‘வாத்து’ சிவராமன். அப்போதைய படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுபாத்திரங்களை ஒரே நடிகரே கையாள்வார். சற்று உன்னிப்பாகக் கவனித்தால்தான் இது பார்வையாளர்களுக்குத் தெரியும். குடுகுடுப்பைக்காரனாக முன்பு வந்து பாக்யராஜிடம் அடிவாங்கும் அதே நபர்தான், பிறகு சிரிப்புத் திருடன் பாத்திரத்திலும் வருவார்.

இவர்கள் கடத்தும் பெண்ணை அரபு தேசத்தில் விற்கும் உத்தேசத்துடன் ‘அரேபியா எங்க இருக்கு..?’ என்று விசாரிப்பதும். “சௌத்தா, நார்த்தா… சுங்குவார்சத்திரம் தாண்டினா அரேபியாதான்” என்று வரும் வசனமும் க்ளைமாக்ஸில் நடக்கும் காமெடி சண்டையும் சுவாரஸ்யமானவை. ‘ருக்குமணி வண்டி வருது’ பாடலை பேண்ட் வாத்திய இசையில் இட்டு பார்வையாளனைத் திருப்தியுடன் வீட்டிற்கு அனுப்பி வைப்பார் இளையராஜா.

இளையராஜவுடன் பாக்யராஜ் அமைத்த முதல் கூட்டணி

ஆம், பாக்யராஜ் + இளையராஜா கூட்டணி முதன் முதலாக அமைந்தது இந்தப் படத்தில்தான். அதுவரை கங்கை அமரன், எம்.எஸ்.வி., சங்கர் – கணேஷ் என்று வெவ்வேறு இசையமைப்பாளர்களை உபயோகித்த பாக்யராஜிற்கு இளையராஜாவுடன் பணிபுரியும் வாய்ப்பு இதில் அமைந்தது. ‘அம்மாடி சின்ன பாப்பா..’ என்கிற தொடக்கப்பாடலும் கண்டசாலா குரலில் மலேசியா வாசுதேவன் பாடிய ‘மதன மோகன ரூப சுந்தரி’ என்கிற கனவுக்காட்சி பாடலும், டி.எல்.மகாராஜன் இந்தி கலந்து பாடிய ‘மேரே பியாரி’ பாடலும் இந்தப் படத்தின் சுவாரஸ்யத்திற்கு ஒரு காரணமாக அமைந்தன. பாடல்களைப் போலவே காட்சிகளின் பின்னணியிலும் நகைச்சுவைத்தன்மையை கூட்டியதில் ராஜாவுக்கு பங்குண்டு.

இன்று போய் நாளை வா

ஒருவேளை இந்தப் படத்தை பாக்யராஜ் இப்போது உருவாக்கியிருந்தால் பல திருத்தங்களை மேற்கொண்டிருப்பார் என்பது உறுதி. அந்த அளவிற்கு அமெச்சூர்த்தனம் படம் முழுவதும் நிறைந்திருந்தது. ‘தான் என்ன செய்யப் போகிறேன்’ என்பதை ஒரு பாத்திரம் சொல்லி விட்டுத்தான் செய்யும். பார்வையாளனுக்கு புரிய வேண்டுமே என்கிற அநாவசிய விளக்கம் அது. இன்னொரு காட்சியில் கேமராவை நோக்கியே ஒரு பாத்திரம் பேசும். ராதிகாவின் பாத்திரம் ஒரு சமயத்தில் வெகுளியாகவும் பிற சமயத்தில் இயல்பாகவும் இருந்தது, கதாபாத்திர வடிவமைப்பின் பிசிறுகளைக் காட்டுகிறது. ஆனால் இத்தனை சிறிய குறைகள் இருந்தாலும் படத்திலுள்ள இயல்பான நகைச்சுவையும் சுவாரஸ்யமான திரைக்கதையும் அனைத்தையும் மறக்கச் செய்தது எனலாம்.

எவ்வித லாஜிக்கும் பார்க்காமல் அமர்ந்தால், இன்றைக்கும் ரசிக்கக்கூடிய இயல்பான நகைச்சுவையுடன் அமைந்திருந்தது இந்தப் படம். நிராயுதபாணியாக நிற்கும் ராவணனிடம் போரிட விரும்பாமல் ‘இன்று போய் நாளை வா’ என்கிற பொருள்பட ராமன் சொன்னதாக எழுதியிருந்தார் கம்பர். ஆனால் நகைச்சுவை என்னும் ஆயுதத்தால் நம்மை நிறையவே கவர்ந்து, `இன்று மட்டுமல்ல, நாளையும் வந்து படத்தைப் பாருங்கள்’ என்று சொல்லாமல் சொன்னார் பாக்யராஜ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.