டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் திருத்தச்சட்டம், 2022 மூலம் தேசிய தலைநகரின் மூன்று உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்ட பிறகு, நடைபெறும் முதல் உள்ளாட்சித் தேர்தல் தற்போது நடத்தப்பட்டது. இதன் வாக்குப்பதிவு, கடந்த டிச. 4ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
மொத்தமிருந்த 250 வார்டுகளிலும் பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. காங்கிரஸ் 247 இடங்களில் போட்டியிட்டது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக ஆம் ஆத்மி கட்சி பெருவாரியான இடங்களை வாரி சுருட்டியுள்ளது. தலைநகரின் உள்ளாட்சி அமைப்பில் பாஜக, காங்கிரஸ் என்ற பழம்பெரும் கட்சிகளை வீழ்த்தி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறது.
பாஜகவை துடைத்தெறிந்த ஆம் ஆத்மி
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், ஆம் ஆத்மி – பாஜக இடையில் கடினமான போட்டியிருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி ஆம் ஆத்மி இந்த பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த 15 ஆண்டு காலமாக டெல்லியின் உள்ளாட்சி அமைப்பில் வேர் பரப்பி, அதனை கையில் வைத்திருந்த பாஜகவை தனது துடைப்பத்தால் ஆம் ஆத்மி கட்சி துடைத்தெறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
इस शानदार जीत के लिए दिल्ली की जनता का शुक्रिया और सबको बहुत-बहुत बधाई। अब हम सबको मिलकर दिल्ली को साफ़-स्वच्छ और सुंदर बनाना है। https://t.co/SFkqmrAI6i
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 7, 2022
ஆம் ஆத்மியின் இந்த வெற்றி டெல்லியுடன் சுருக்கிவிட முடியாத வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. நாளைய தினம் வெளியாக உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலிலும் இதேபோன்று ஆம் ஆத்மி அதிர்ச்சியளிக்க காத்திருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.
2015இல், டெல்லியில் காங்கிரஸ் அரசை தோற்கடித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியமைத்தது போன்று, கடந்த மார்ச் மாதம், பஞ்சாப்பில் ஆட்சியில் இருந்த அதே காங்கிரஸ் வீட்டுக்கு அனுப்பி, அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது.
பகடியை உடைத்து பெரும் வெற்றி!
இதனால், காங்கிரஸை மட்டுமே ஆம் ஆத்மி கட்சியால் வீழ்த்த முடியும் என பாஜக தொடர்ந்து பகடி பிரச்சாரம் செய்துவந்த நிலையில், முதல்முறையாக பாஜகவை பெரிய அளவில் வீழ்த்தி ஆம் ஆத்மி அதிகாரத்தை கைக்கொண்டுள்ளது. “உலகின் மிகப்பெரிய கட்சியை, மிகச்சிறிய கட்சி வீழ்த்தியிருக்கிறது” என உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து, ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் இருக்கும் குஜராத், ஹிமாச்சல் என இரண்டு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களுடன், இந்த டெல்லி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. பாஜகவின் அசூர பிரச்சாரத்தை மீறி ஆம் ஆத்மி இந்த சாதனையை படைத்துள்ளது. ஆம் ஆத்மி குஜராத், ஹிமாச்சல், டெல்லி என அனைத்து இடங்களில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டாலும் டெல்லியும், குஜராத்தும் தான் அதன் முக்கிய குறியாக இருந்தது.
ஆம் ஆத்மியின் டெல்லி மாடல்
டெல்லியின் உள்ளாட்சி அமைப்பில், குடியிருப்புகள் சேரும் குப்பைகளை கையாளுதல் மற்றும் அப்புறப்படுத்துதல் பிரச்னை இந்த தேர்தலில் மிகத் தீவிரமாக பேசப்பட்டது. இந்த பிரச்னையை ஆம் ஆத்மி தனது பிரச்சாரத்தில் கையிலெடுத்திருந்தது. மேலும், சாலைகள், தெருவிளக்குகள் இருந்த குறைபாடுகள் தொடங்கி தொடக்கப்பள்ளிகள் வரை பல பிரச்னைகள் கடந்த கால உள்ளாட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மீது நம்பிக்கை இழக்க செய்ததாக தெரிகிறது.
யூனியன் பிரதேசமான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டு வரும், ஆம் ஆத்மி டெல்லி மாடல் ஆட்சி, உள்ளாட்சியில் எதிரொலித்துள்ளது. துணைநிலை ஆளுநருடன் ஆம் ஆத்மிக்கு ஏற்கெனவே பல பிரச்னைகள் நீடித்து வருகிறது. தற்போது, ஆம் ஆத்மியின் இந்த வெற்றி, டெல்லி ஆட்சியை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் என கூறப்படுகிறது.
மோடி எதிர்ப்பா… பாஜக எதிர்ப்பா…?
பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் வேரூன்ற வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கடந்தா ஒன்றரை ஆண்டாக அங்கு களப்பணி மேற்கொண்டார். பல பொதுக்கூட்டங்கள், பேரணிகள் என தொடர் செயல்பாட்டினை அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டார். இது பாஜக எதிர்ப்பா அல்லது மோடி என்ற ஆளுமையை மீதான எதிர்ப்பா என்ற கேள்விகள் எழுந்தது.
பாஜகவின் இந்துத்துவா வாக்கை முழுவதுமாக சுவீகரிக்கும் நோக்கில் ஆம் ஆத்மி செயல்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது டெல்லியில் பாஜகவை வீழ்த்தியிருக்கிறது. ஒருவேளை, நாளை குஜராத்தில் எதிர்பாராத வெற்றி ஆம் ஆத்மி குவித்தால், அது நிச்சயம் மோடி என்ற ஆளுமை மீதான அரவிந்த் கெஜ்ரிவாலின் தாக்குதலாகவே இருக்கும்.
குஜராத்தில் 15 – 20 வாக்கு சதவீதத்தை பெற்றாலே, அது நிச்சயம் ஆம் ஆத்மிக்கு தலைகீழ் மாற்றமாக அமையும். பிராந்திய அளவில் கவனத்தை அதிகரித்து, அதன்மூலம் தேசிய அரசயிலில் வாக்குகளை அறுவடை செய்யலாம் என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் வியூகத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த டெல்லி அமைந்துள்ளதாகவே புரிந்துகொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.