18 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு PM-2 மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் சேதப்படுத்தியதோடு, இருவரை கொன்ற PM-2 மக்னா யானை 18 நாள் நீண்டப் போராட்டத்திற்கு பிறகு இன்று மதியம் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தேவாலா, வாழவயல் பகுதியில் காளிமுத்து என்பவர் வீட்டை யானை உடைத்து சேதப்படுத்தி, வீட்டில் இருந்த அரிசியை சாப்பிட்டு சென்றது. சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அங்கிருந்து நகர்ந்த யானை, புளியம்பாறை அருகே உள்ள மய்யக்கொல்லி வனப்பகுதிக்குள் சென்று பதுங்கி கொண்டது. ட்ரோன் கேமராக்கள் மற்றும் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணித்து வந்தனர். மதியம் 2 மணி அளவில் மய்யக்கொல்லி வனப்பகுதியில் வைத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட யானை சிறிது தூரம் சென்று மயங்கியவாறு நின்றது. கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானைக்கு வனத்துறையினர் கால்களில் கயிறுகளை கட்டி மரத்தில் கட்டி வைத்தனர்.
தற்சமயம் பிடிபட்ட யானை வனத்துறையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. யானை பிடிப்பட்டிருக்க கூடிய பகுதி அடர் வனப்பகுதி என்பதால், அங்கு லாரியை கொண்டு செல்வது சிரமமாக உள்ளது. ஜேசிபி மூலம் சாலையை அமைத்து லாரியை உள்ளே கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன் பின்னரே யானையை ஏற்றி முதுமலை வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு குறைந்தது பத்து மணி நேரமாவது ஆகும் எனவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM