சென்னை: மாண்டஸ் புயல் மற்றும் கன மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.9) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மாண்டஸ் புயல்: மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 460 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி வெள்ளிக்கிழமை (டிச.9) இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே கரையைக் கடக்கக் கூடும். இதன் காரணமாக 8, 9, 10 தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
தலைமைச் செயலர் ஆலோசனை: வானிலை மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து புயல் மற்றும் கனமழை தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தியிருந்தார்.
8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு: இதனைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.9) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். வாசிக்க > வானிலை முன்னறிவிப்பு