வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக, இன்று முதல் 10-ம் தேதி வரையிலான 3 நாட்கள் 24 மணி நேரமும் மாநகராட்சி களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த மழைப்பொழிவின்போது மழைநீர் அதிகம் தேங்கிய அனைத்து இடங்களிலும் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் கூடுதல் மோட்டார்களையும் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். இன்று (8-ம்தேதி) முதல் 10-ம் தேதி வரையிலான 3 நாட்கள் 24 மணி நேரமும் மாநகராட்சி களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும்.
அதற்குரிய முறையில், சுழற்சி முறையில் பணியாளர்களுக்கான வேலை நேரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் மீட்புப் பணிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உதவும் வகையில், 10 தற்காலிக தொழிலாளர்கள் தயார் நிலையில் இருப்பதை மண்டல அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மண்டல வரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்.
வலுவற்ற நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும். மண்டல அளவிலான அதிகாரிகள் மரங்கள் அகற்றப்படுவதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். மர அறுவை இயந்திரம் மற்றும் மரங்களை வெட்டி அகற்றும் சக்திமான் இயந்திரம் போன்ற அனைத்து இயந்திரங்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் என அனைத்து மழைநீர் வடிகால்களிலும் மழைவெள்ள நீர் தடையின்றி வெளியேறுவதற்கு ஏற்ற முறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை இன்று மாலைக்குள் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து வார்டுகளிலும் மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும். போதுமான மருந்துகள் மருத்துவமனைகளில் இருப்பு இருப்பதை மருத்துவக் குழுவினர் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.