வாட்ஸ்அப் மெசேஞ்சர் பயனர்களுக்காக அவதார் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம். பயனர்கள் தங்களுக்கென பிரத்யேக அவதரை உருவாக்குவது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் பயனர்கள் வாட்ஸ்அப் தளத்தில் தங்களது அவதாரை உருவாக்கும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது குறித்து கடந்த செப்டம்பர் வாக்கில் ‘இந்து தமிழ் திசை’ தளத்தில் பதிவு செய்திருந்தோம்.
மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் தளத்தில் அவதார் அம்சம் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அது வாட்ஸ்அப்புக்கும் வருகை தந்துள்ளது. இந்த அவதார் அம்சத்தின் மூலம் பயனர்கள் சாட் செய்யும் போது அதை ஸ்டிக்கராக அனுப்பலாம். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளங்களுக்கும் அறிமுகமாகி உள்ளது.
பயனர்கள் தங்கள் அவதாரை உருவாக்குவது எப்படி?
- பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை தங்கள் போன்களில் ஓப்பன் செய்ய வேண்டும். அதற்கு முன்னர் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்து கொள்வது மிகவும் அவசியம்.
- ஏதேனும் ஒரு சாட் (Chat) பாக்ஸை ஓபன் செய்ய வேண்டும். பின்னர் ஸ்டிக்கரை டேப் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டு பயனர்கள் எமோஜி டேப் மூலம் ஸ்டிக்கருக்கு செல்லலாம்.
- அதில் பயனர்கள் ‘+’ பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- பின்னர் ஸ்கின் டோன், ஹேர் ஸ்டைல், முக அமைப்பு, ஆடை உட்பட தங்களுக்கு பிடித்த வகையில் அவதாரை உருவாக்க வேண்டும்.
- பயனர்கள் தங்கள் முகத்திற்கு ஏற்றபடி அவதாரை உருவாக்க மிர்ரர் கேமரா ஆப்ஷனும் உள்ளது.
- கம்மல் போடுவது, பொட்டு வைப்பது, முகத்தில் இருக்கும் சுருக்கம் வரையில் அனைத்தையும் இதில் சேர்க்கலாம்.
- அனைத்தையும் முடித்த பிறகு ‘டன்’ என கொடுத்தால் பயனர்களின் பிரத்யேக அவதார் தயாராகிவிடும்.
- பின்னர் வழக்கம் போல ஸ்டிக்கர் ஆப்ஷனில் அந்த அவதாரை பயனர்கள் பயன்படுத்தலாம்.