மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை அளிக்க மறுத்த விதம் குரூரமானது: சு.வெங்கடேசன் எம்.பி கொந்தளிப்பு

புதுடெல்லி: மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களை இருந்த சலுகையை மீண்டும் அளிக்க முடியாது என ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதை அவர், மதுரையின் சிபிஎம் எம்.பி.யான சு.வெங்கடேசன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கான பதிலில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களவை சிபிஎம் எம்.பி-யான சு.வெங்கடேசன் மக்களவையில் எழுப்பிய கேள்வியில், ”மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை வழங்கக் கோரி நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை அளித்துள்ளதா? எதற்காக அச்சலுகை வழங்கப்படவில்லை?” எனக் கேட்டிருந்தார்.

இதற்கு ரயில்வே அமைச்சர் அளித்துள்ள பதில்: “2019-20-ஆம் ஆண்டில் மானியங்களுக்காக ரூ 59,837 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கும் 53 சதவீதம் தான் கட்டணம் சராசரியாக வசூலிக்கப்படுகிறது. 47 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது மற்றும் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் ஆகியோருக்கு சலுகை அளிக்கப்படுகிறது. ரயில்வே நிறைய வகையிலான ரயில்களை அரசு இயக்குகிறது. அதாவது துரந்தோ, வந்தே பாரத், தேஜஸ், கதிமான், ஹம்சபர், எக்ஸ்பிரஸ், மெயில், பாசஞ்சர் என இயக்குகின்றன. அவற்றில் வெவ்வேறு வகுப்பு பயணங்களும், முதல், இரண்டாம், சாதாரண வகுப்புகளும் உள்ளன. ஆகவே, மூத்த குடிமக்கள் அவரவர் விரும்புகிற வகையில் பயணம் செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் பதில் மீது வெங்கடேசன் கருத்து: இது குறித்து செய்தியாளர்களிடம் எம்.பி வெங்கடேசன் கூறியதாவது: “இவர்கள் சொல்கிற மானிய கணக்கு பழையதுதான். அப்போதும் மூத்த குடிமக்கள் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆகவே மானியத்தை காரணம் காண்பிப்பது ஏமாற்றுகிற வேலை. நீங்கள் தந்து வரும் பெருநிறுவனங்களின் சலுகைகளும், வரிக் குறைப்புகளும் இதைப் பல மடங்கு இல்லையா?

நாடாளுமன்ற நிலைக்குழு பயணிகள் வருமானம் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் இந்த மூத்த குடிமக்கள் பயணச் சலுகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை பயணிகள் வருமானம் 43 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வந்துள்ளது. இதே காலத்தில் சென்ற ஆண்டு 24 ஆயிரத்து 600 கோடி ரூபாய் தான் வருமானம் வந்தது. இந்த தகவலை ரயில்வே அமைச்சகம் முன்பே செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த அடிப்படையில் பார்த்தால் பயணிகள் வருமானம் சென்றாண்டை விடவும் 2019-20-ஐ விடவும் கூடுதலாக 50,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில் நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரையையும் புறந்தள்ளி மூத்த குடிமக்களுக்கான பயண சலுகை மறுப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை .மூத்த குடிமக்கள் மருத்துவத்திற்காகவும் சுற்றுலாவுக்காகவும் செல்லும் பயணத்திற்கு பயண சலுகை மறுப்பது ஈவிரக்கமற்ற செயல் ஆகும். இதை விட ரயில்களின் பலவகை, பயண வகுப்புகளின் பல வகைகளை சொல்லி அவற்றில் அவரவர் தெரிவு செய்து கொள்ளட்டும் என்று கூறி இருப்பது குரூரமானது. ‘வக்கு இருக்கிறதுக்கு தகுந்த மாதிரி போய்க் கொள், இல்லாவிட்டால் போகாமல் இரு’ என்று சொல்கிற தொனி அமைச்சரின் பதிலில் இருப்பது வருந்தத்தக்கது.

ஒரு நாகரிக சமுகத்தின் பண்புகளில் ஒன்று மூத்த குடிமக்களின் நலன் பேணுவது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். கோரிக்கை வைத்தால் எள்ளி நகையாடுவது அழகல்ல. மூத்த குடிமக்கள் எந்த விதமான வருமானமும் இன்றி 78 சதவீதம் பேர் தங்கள் பிள்ளைகளை நம்பி உள்ளார்கள் என்று தேசிய மாதிரி ஆய்வு கூறுகிறது. பிள்ளைகளோ வேலையில்லா திண்டாட்டத்தாலும், வருமானம் குறைவான வேலையாலும், விலைவாசி உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கான இந்த பயணச் சலுகை மறுப்பது மூத்த குடிமக்களை மேலும் உளவியல் சிக்கல்களுக்குள் தள்ளுவதற்கே வழிவகுக்கும். 14 கோடியே 43 லட்சம் மூத்த குடிமக்கள் நமது நாட்டில் உள்ளார்கள். இவர்களின் நலனை புறக்கணிக்கும் வகையில் ரயில்வேயின் இந்த முடிவு கடுமையான கண்டனத்திற்குரியது” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.