சென்னை: நாட்டில் ஒற்றுமையின்மையையும், கலவரத்தையும் தூண்டுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகி அளித்த புகார், மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை சைபர் க்ரைம் போலீஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆர்எஸ்எஸ் சட்டப் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான மதுரையை சேர்ந்த பி.ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த நவம்பர் மாதம் 6-ம் தேதி, மதுரையில், சிதம்பரம் தொகுதி எம்பியும், விசிக தலைவருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மதத்திற்கு எதிரான அவதூறு கருத்துகளை தெரிவித்தார்.
அவரது இந்தப் பேச்சு, நாட்டில் ஒற்றுமையின்மையையும், கலவரத்தையும் தூண்டுவதாக விதமாக உள்ளது. எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபியிடம் புகார் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சைபர் க்ரைம் பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் புகார் மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுவிட்டது. எனவே, மதுரை காவல் ஆணையரை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “இந்த வழக்கில் மதுரை காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.