மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மாநிலத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள இது, நாளை (டிச. 9-ம் தேதி) காலை வரை தீவிர புயலாக இருக்கும். அதன்பின் படிப்படியாக வலுப்பெறும்.
இந்தப் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 520 கிலோமீட்டர் தொலைவிலும், கரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கிற்கு சுமார் 460 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடைப்பட்ட பகுதிகளில் கரையை கடக்கக்கூடும்.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 65 முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், வட தமிழ்நாடு, புதுச்சேரியில் மிக பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் நாளை (09.12.22) மற்றும் நாளை மறுநாள் (10.12.22) ஆகிய 2 நாட்கள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.