மகனின் கழுத்தை நெரித்து கொலை ம.பி.,யில் கொடூர தந்தை கைது
தேவஸ்
; மத்திய பிரதேசத்தில் கள்ளக்காதலியுடன் இருந்தபோது மகன்
பார்த்துவிட்டதால், சிறுவனின் கையை துண்டாக வெட்டியதுடன், கழுத்தை
நெரித்துக் கொலை செய்த கொடூர தந்தையை, போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு,
தேவஸ் மாவட்டத்தில் உள்ள பங்கார்டா கிராமத்தைச் சேர்ந்த ௪௫ வயது நபர், ௩௫
வயது பெண்ணுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு வைத்திருந்துஉள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை, இவரது ௧௫ வயது மகன் பார்த்துவிட்டான்.
இதில்
ஆத்திரமடைந்த தந்தை, மகன் என்றும் பாராமல், சிறுவனின் கையை வெட்டி,
கிணற்றில் வீசினார். பின், அவனை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை
புதரில் வீசி எறிந்துள்ளார்.
சிறுவனின் உடலை நேற்று மீட்ட போலீசார்,
பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இதன் அறிக்கையில், சிறுவன் கழுத்து
நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. .
இதையடுத்து, சிறுவனின் தந்தையிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதில், சிறுவன் காணாமல் போனது குறித்து, ஏன் புகார் அளிக்க வில்லை என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மகனை கொலை செய்ததை, அவர் ஒப்புக்கொண்டார்.
இது
குறித்து போலீசார் வழக்கு பதிந்து, சிறுவனின் தந்தை மற்றும் கள்ளக் காதலி
இருவரையும் கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.
முன்னாள் காதலியின் வருங்கால கணவரின் வீட்டுக்கு தீ வைத்தவருக்கு 6 மாதம் சிறை
சிங்கப்பூர்; முன்னாள் காதலியின் வருங்கால கணவர் வீட்டுக்கு தீ வைத்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது.
தென் கிழக்கு ஆசிய நாடானா சிங்கப்பூரில் வசிப்பவர் சுரேந்திரன் சுகுமாரன், 30. இவர் அதே நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார்.
ஆனால், சில மாதங்களிலேயே காதல் முறிந்தது. இந்நிலையில், இந்தப் பெண்ணுக்கு முஹமது அஸ்லி முஹமது சலேஹ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்த தகவலை சமூக வலைதளம் வாயிலாக அறிந்த சுகுமாரன் கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன், அஸ்லி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு முகமூடி அணிந்து சென்றார்.
அங்கு, 13வது மாடியில் வசிக்கும் அஸ்லியின் வீட்டு கதவை வெளிப்பக்கம் பூட்டிவிட்டு, செருப்புகள் மற்றும் கதவுக்கு தீ வைத்தார். உள்ளேயிருந்த அஸ்லி, தன் வீட்டுக்கு வெளியே தீ எரிவதை உணர்ந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீஸ் வந்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த முகமூடி அணிந்த உருவத்தை ஆய்வு செய்து அது, சுரேந்திரன் சுகுமாரன் என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுகுமாரனுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
போலீஸ் தாக்கியதில் விவசாயி மரணம்?
சென்னை; அரியலுார் மாவட்டத்தில், போலீசார் தாக்கியதில் பலியானதாக கூறப்படும் விவசாயி உடலை பிரேத பரிசோதனை செய்ய, மருத்துவர் குழு நியமிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அரியலுார் மாவட்டம், காசன்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்த மனு:
என் உறவினர் செம்பு லிங்கத்தின் மருமகன் அருண்குமார் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், விக்கிரமங்கலம் போலீசார் பதிவு செய்த வழக்கில், அவரை போலீசார் தேடி வந்தனர்.
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, மொபைல் போன், ‘டிவி’ உட்பட பல பொருட்களை சேதப்படுத்தினர். செம்புலிங்கத்தையும், குடும்பத்தினரையும் தாக்கினர்.
அவர் கூறிய வாக்குமூலத்துக்கு முரணாக பதிவு செய்து, அச்சுறுத்தி கையெழுத்து பெற்றனர்.
பலத்த காயமடைந்த செம்புலிங்கம், அரியலுார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நவ., 25ல் சம்பவம் நடந்தது.
பின், திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். டிச., 8ல், செம்புலிங்கம் இறந்தார்.
போலீசாரின் கடுமையான தாக்குதலால் தான், இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. இதற்கு, விக்கிரமங்கலம் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, சப் – இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் ஐந்து கான்ஸ்டபிள்கள் காரணம்.
இந்த வழக்கை, விக்கிரமங்கலம் போலீசாரிடம் இருந்து, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும். சிறப்பு மருத்துவர்களை நியமித்து, செம்புலிங்கத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
சாட்சியை கொல்ல முயற்சி வாலிபர்கள் 7 பேர் கைது
கோவை :; கொலை முயற்சி வழக்கில் சாட்சியம் அளிக்க வந்தவரை, கொல்ல முயற்சித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், நேற்று முன்தினம் மாலை ஒரு கும்பல் சேர்ந்து, வாலிபர் ஒருவரை தாக்க முயற்சித்தது. அங்கு சென்ற ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், 2019ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் சாட்சியம் அளிக்க வந்தவரை, கும்பல் சேர்ந்து தாக்கி கொல்ல முயற்சித்தது தெரியவந்தது.
இதையடுத்து, கணபதியை சேர்ந்த சுகந்திரம், 22, சரவணம்பட்டி சஞ்சீவ்குமார், 20, கணபதி சுதீர், 18, பாப்பநாயக்கன்பாளையம் சுபாஷ், 24, துடியலுார் சஞ்சய், 23, மணப்பாறையை சேர்ந்த தமிழ்மணி, 23 மற்றும் 17 வயதான வாலிபர் ஒருவர் என 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 17 வயதான மைனர் வாலிபர் மட்டும், அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். மற்ற 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறை சுவர் ஏறி குதித்த வாலிபரிடம் விசாரணை
கோவை : கோவை சிறையில் நள்ளிரவு சுவர் ஏறிக் குதித்த வாலிபரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில் வாலிபர் ஒருவர், சிறையின் சுவர் மீது ஏறி உள்ளே குதித்தார். அவர் சுவர் ஏறி குதிப்பதை பார்த்த சிறைக்காவலர்கள், துரத்திப்பிடித்து விட்டனர்.
விசாரணையில் அந்த வாலிபர், கேரள மாநிலம் மணப்புரத்தை சேர்ந்தவர் என்றும், பெயர் அனஸ், 30, என்றும் தெரியவந்தது. வேலை தேடி கோவை வந்ததாகவும், சிறை என்று தெரியாமல் சுவர் ஏறிக்குதித்து விட்டதாகவும், அந்த வாலிபர் தெரிவித்துள்ளார். மேல் விசாரணைக்காக அந்த வாலிபர், ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கொலை வழக்கில் ஊராட்சி தலைவர் கைது
சோழவரம் : சோழவரம் அடுத்த, எடப்பாளையம், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் முரளி, 23. பால் வியாபாரி. கடந்த அக்டோபர் மாதம், 28ம் தேதி, முன் விரோதத்தில், இவரை ஒரு கும்பல் கடத்தி சென்று, சோழவரம் ஏரிக்கரை அருகே, உருட்டை கட்டை மற்றும் இரும்பு தடியால் தாக்கிவிட்டு தப்பியது.
ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், மறுநாள் காலை, இறந்தார்.
கொலை வழக்கில், தொடர்புடைய, அலமாதி பகுதியைச் சேர்ந்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் தொடர்புடைய, அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணனை, கைது செய்ய வேண்டும் என, முரளியின் உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேற்கண்ட வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவானதை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று அலமாதியில் பதுங்கியிருந்த தமிழ்வாணனை, 31, சோழவரம் போலீசார் கைது செய்தனர்.
நண்பர்களுடன் உல்லாசத்துக்கு வற்புறுத்தல் ‘சைக்கோ’ கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்
சம்பிகேஹள்ளி : அடித்து துன்புறுத்தி நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வைத்த கணவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு சம்பிகேஹள்ளியை சேர்ந்தவர் ஜான் பால், 41. இவர் மீது, மனைவி சம்பிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் பாலியல் சித்ரவதை புகார் அளித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சாப்ட்வேர் இன்ஜினியரான எனக்கும், என் கணவர் ஜான் பாலுக்கும் 2011ல் திருமணம் நடந்தது. 2015ம் ஆண்டு வரை எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது.
இதன் பின்னர், அவர் தன் சுயரூபத்தை காட்ட துவங்கினார். நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து மது விருந்து வைத்தார்.
அப்போது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தினார். முடியாது என மறுக்கவே, அடித்து துன்புறுத்தினார். அவரது சித்ரவதை தாளாமல், அவருடைய இரண்டு நண்பர்களுடன் உல்லாசமாக இருந்தேன்.
இதை என் கணவர், ‘வீடியோ’ எடுத்து வைத்து கொண்டார். என் தங்கையை, தன்னுடன் உல்லாசமாக இருக்க சம்மதிக்க வைக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தார்.
தொந்தரவு தாளாமல் விவாகரத்து செய்ய தீர்மானித்தேன். கோபம் அடைந்த அவர், நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டல் விடுக்கிறார். என் கணவர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர். வீட்டில் பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்க்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பிகேஹள்ளி போலீசார், ஜான் பால் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்