முத்தம் கொடுத்த ஒரே ஒரு போட்டோவை வைத்துக் கொண்டு 17 வயது சிறுமியை பிளாக்மெயில் செய்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் மும்பையை அடுத்த கார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியும் கைது செய்யப்பட்ட சிறுவனும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என கார் போலீஸ் தெரிவித்திருக்கிறது. கடந்த அக்டோபர் 10ம் தேதியன்று பாந்த்ராவின் கார்ட்டெர் சாலைப் பகுதியில் சிறுமியின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அப்போது அந்த 17 வயது சிறுவன் சிறுமிக்கு முத்தம் கொடுத்ததை செல்ஃபி எடுத்து வைத்திருக்கிறார்.
அந்த ஃபோட்டோவை இன்டெர்நெட்டில் கசிய விட்டுவிடுவேன் என அச்சிறுமியை தொடர்ந்து மிரட்டி அக்டோபர் 10 முதல் 26ம் தேதி வரை பல முறை சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்த சம்பவம் அனைத்தும் அண்மையில் சிறுமியின் கல்லூரிக்கு அங்கு வைத்து தன்னுடன் வெளியே வர மறுத்ததால் அவரை அந்த சிறுவன் தாக்கியதை அடுத்து அம்பலமாகியிருக்கிறது.
இதனையடுத்து சிறுமியின் தோழி, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு தனது மகளிடம் சிறுமியின் பெற்றோர் விசாரித்த போதுதான் உண்மை தெரிய வந்திருக்கிறது. பின்னர் கேர்வாடி போலீசிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சம்பவம் நடந்தது கார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் வழக்கு அங்கு மாற்றப்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய கார் போலீசார், பலவந்தமாக வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை கடந்த டிசம்பர் 9ம் தேதி வீடு புகுந்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM