தமிழக அமைச்சராக
வருகிற 14ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பே அமைச்சர்கள் பலர் கூறிவந்தனர். அதனை முதன்முதலாக கொளுத்திப் போட்டவர் பள்ளி கல்வித்துறை அமைச்சரும், உதயநிதியின் ஆருயிர் நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஸ்டாலின் ஆட்சியமைத்தே போதே, உதயநிதியின் பெயர் அமைச்சர்கள் லிஸ்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
ஆனாலும், உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்று குடும்பத்தில் இருந்தே அவருக்கு அழுத்தம் வந்ததாகவும், ஆனால், வாரிசு அரசியல் விமர்சனங்கள் கடுமையான எழுந்து விடும் என்பதை காரணம் காட்டி தனது குடும்பத்தினரை ஸ்டாலின் ஆஃப் செய்து வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது.
இருப்பினும், உதயநிதியை அமைச்சராக்கும் தீர்மானத்தை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிறைவேற்றி, அடுத்தக்கட்ட நடவடிக்கையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடன்பிறப்புகள் தொடங்கினர். இந்த நிலையில், உதயநிதி அமைச்சராவது பற்றிய பேச்சுகள் மீண்டும் தீவிரம் பெற்றுள்ளது. அதன்படி, தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வருகிற 14ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளதாகவும், அவரது பதவிப்பிரமாணத்துக்காக ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். அவருடன் 34 அமைச்சர்கள் உள்ளனர். ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபோதே, கலைஞர் போன்று ஒரே அமைச்சரவை இருக்காது எனவும், அவ்வப்போது மாற்றியமைக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால், அவர் ஆட்சியமைத்து ஓராண்டை கடந்துள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் ராஜகண்ணப்பன், சிவசங்கர் ஆகிய 2 அமைச்சர்களின் துறைகள் மட்டுமே மாற்றப்பட்டது. அதுவும், ராஜகண்ணப்பன் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியதாலேயே அந்த மாற்றம் செய்யப்பட்டது.
இந்த பின்னணியில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முதல்வர் ஸ்டாலின் க்ரீன் சிக்னல் காட்டி விட்டதாகவும், அதனடிப்படையிலேயே வருகிற 14ஆம் தேதி அவர் அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, உதயநிதியுடன் வேறு சில புது முகங்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவுள்ளதாகவும், சில துறைகளை கவனித்து வரும் சீனியர்கள் அதிருப்தியில் இருப்பதால், அவர்களை திருப்திப்படுத்தும் பொருட்டு, துறை மாற்றம் செய்யப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதன்படி, அமைச்சர் மெய்யநாதனிடம் உள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும், முதலமைச்சர் ஸ்டாலின் கவனித்து வரும் சிறப்புத்திட்ட செயலாக்கம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கவனித்து வரும் வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகிய துறைகள் உதயநிதிக்கு ஒதுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனுக்கு தலைமை செயலகத்தில் இருக்கும் அறையை அமைச்சராகவுள்ள உதயநிதிக்கு ஒதுக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேபோல், கூட்டுறவுத் துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமியிடம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் கூட்டுறவுத் துறையை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் வசம் இருக்கும் துறையும், ஐ.பெரியசாமி வசமிருக்கும் துறையும் அவர்களுக்குள் மாற்றம் செய்யப்படவிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சீனியரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பதால், பெரியகருப்பனிடம் இருக்கும் துறை ஐ.பெரியசாமிக்கும், அவரிடம் இருக்கும் துறை பெரியகருப்பனுக்கும் மாற்றம் செய்யப்படவிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பணிச்சுமையை குறைக்கும் பொருட்டு, அவரிடம் உள்ள மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் அமைச்சர் ராமச்சந்திரனிடம் உள்ள வனத்துறை ஆகியவற்றையும் பிரித்து வேறு அமைச்சர் அல்லது புது முகங்களுக்கு கொடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை இளைஞர்கள், பெண்களிடம் அவருக்கு வரவேற்பு இருக்கிறது. கடந்தகால தேர்தல்களில் அவர் பிரசாரத்துக்கு சென்ற போது கூடிய கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் மற்றும் பெண்கள். எனவே, எதிர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றை மனதில் வைத்து முதல் தலைமுறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், இளைஞர்கள், பெண்களை ஈர்க்கும் வகையிலான துறைகளை அவருக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சிறப்புத்திட்ட செயலாக்கத்தின் கீழ் மாநில திட்டக்குழு சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன. வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார இயக்கத்துறையில் மகளிர் சுய உதவிக் குழு இயக்கம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை உள்ளன. மேலும், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையும் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெற்ற போது, அதனை முன்னின்று நடத்தியவர் உதயநிதி என்பது இங்கு கவனிக்கத்தக்கது.