பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புடவைகளை ஏலம் விட கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சமூக ஆர்வலர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஜெயலலிதா மறைந்துவிட்டார். மற்ற மூவரும் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் முடிந்த பின்னர் 3 பேரும் விடுதலையாகி வெளியே வந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த பட்டு சேலைகள், சால்வைகள், 750 ஜோடி செருப்புகள், 250 சால்வைகள் ஆகிய பொருட்களும் அடங்கும். இவை கடந்த 2011-ம் ஆண்டு முதல் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘‘ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் புடவைகள், செருப்புகள், சால்வைகள் விரைவாக சேதம் அடையக்கூடியவை. மற்ற பொருட்கள் எளிதில் சேதம் அடையாது. எனவே புடவை உள்ளிட்ட 3 வகையான பொருட்களை விரைவாக ஏலம் விட உத்தரவிட வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.
ஏலம் விடுவதன் மூலம் வரும் தொகையை பொதுமக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.