மும்பை: தமிழ் சினிமாவில் கோ, ஏகன், கோவா ஆகிய படங்களில் நடித்தவர் தான் நடிகை பியா பாஜ்பாய். எப்போதும் படங்களில் சுறுசுறுப்புமாக காணப்படும் பியா, சமந்தாவை போல் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. சமந்தாவின் உடல்நிலை பற்றி கூறியுள்ள தகவலில் தன்னைப் பற்றியும் ஒரு அதிர்ச்சி செய்தியை பகிர்ந்துள்ளார் பியா. அதாவது “சென்ற சில மாதங்களாகவே நடிகை சமந்தா மயோசிடிஸ் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நோய் குறித்து ஒவ்வொரு விதமாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் பியா, ‘‘தற்போது சமந்தா எவ்விதமான துன்பத்தை அனுபவித்து வருகிறார் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஏனெனில் இதற்கு முன்பாக நானும் இதேபோன்ற ஒரு கடினமான சூழலை சந்தித்து தான் மீண்டு வந்திருக்கேன்” என்று கூறியுள்ளார்.
இது பற்றி பியா கூறியது: 2015ம் ஆண்டு படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது எனது இடது காலில் வலி ஏற்பட்டது. படப்பிடிப்பில் நடனம் ஆடும்போது, சுளுக்கு பிடித்திருக்கலாம் என நினைத்துக்கொண்டேன். ஓட்டல் அறைக்கு இரவு தூங்க சென்றேன். காலையில் எழுந்ததும் இரண்டு கால்களிலும் வலி உண்டானது. பெட்டிலிருந்து எழுந்திருக்க முடியவில்லை. அதன் பிறகு சோர்வு அதிகமானது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது தசை அழற்சி எனும் மயோசிடிஸ் நோயால் பாதித்திருப்பது தெரிந்தது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டேன். இதனால் சினிமாவிலிருந்தும் விலகி இருந்தேன். அதனால்தான் இடையில் படங்களில் நடிக்கவில்லை. இது பற்றி சமந்தா தைரியமாக பேசிவிட்டார். எனக்கு அந்த தைரியமில்லை. இதனால் அப்போது இதை நான் உலகத்துக்கு தெரிவிக்கவில்லை. மறைத்துவிட்டேன். சமந்தாவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை, நெருக்கடி எனக்கு புரிகிறது. அவர் விரைவில் இதிலிருந்து மீண்டு வர வேண்டும். இவ்வாறு பியா கூறினார்.