பாலுறவுக்கு சம்மதிக்கும் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – டி.ஒய்.சந்திரசூட்

போக்சோ வழக்குகளை விசாரிப்பதில் நீதிமன்றத்தில் சிக்கல் இருந்து வருவதால் இளம் பருவத்தினர் பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியறுத்தியுள்ளார்.

18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், 17 வயதனான காதலர்கள் அவர்களது சம்மதத்துடன் பாலுறவு வைத்துக்கொண்டாலும் ஆணை கைது செய்து சிறையில் அடைப்பதும், அதனால் பெண்ணின் விவகாரம் வெளியில் தெரிந்து மன ரீதியாக அவர் பாதிக்கப்படுவதும் போக்சோ வழக்கின் ஓர் சிக்கலாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான டெல்லி கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, முழு சம்மதத்துடன் உடல் உறவில் ஈடுபடும் முன் துணையின் வயதை சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் பரபரப்பான உத்தரவை பிறப்பித்தது. அதுவும் விவாதமானது.

இந்த நிலையில், யுனிசெப் அமைப்புடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தின் சிறார் நீதி குழு நடத்திய இரண்டு நாள் ஆலோசனையில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் போக்சோ சட்டத்தின் சிக்கல்களை எடுத்துரைத்து, பாராளுமன்ற குழுவுக்கு கோரிக்கைகளை முன்வைத்தார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், 18 வயதுக்குட்பட்டவர்கள் முழு சம்மதத்துடன் பாலுறவில் ஈடுபட்டாலும் போக்சோ சட்டம் அதை குற்றமாக கருதுகிறது.

இளம் பருவ காதலர்களின் பாலியல் செயல்பாடுகளை கையாள்வதில் நீதிமன்றங்கள் சவாலை எதிர்கொள்கின்றன. நான் நீதிபதியாக இருந்த காலத்தில், போக்சோ வழக்குகளை கையாண்ட நீதிபதிகள் பலருக்கு கடினமான கேள்விகள் எழுந்ததை கவனித்துள்ளேன். ஆகையால், போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள வயது வரைமுறையை நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

மேலும், 18 வயதுக்குட்பட்டவர்கள் பாலுறவு வைத்துக்கொள்வது குற்றம் என சட்டம் கருதுகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் போக்சோ வழக்குகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரும்பாலான போக்சோ வழக்கு குற்றவாளிகள் மன ரீதியாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது. அதேசமயம், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அமைதியின் கலாச்சாரத்தால் மறைக்கப்படும் பிரச்சினையாகவும் உள்ளது.

குற்றவாளி ஒரு குடும்ப உறுப்பினராக இருந்தாலும், வெளிப்படையாக புகாரளிக்க முன் வரவேண்டும் அதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றார். அதைத் தடுக்க நீதித்துறையுடன் நிர்வாகமும் கைகோர்க்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.