இந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் நடைபெற்ற ஏழு மாநில சட்டமன்றத் தேர்தலில், ஐந்து மாநிலங்களில் பாஜக-வும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தலா ஒரு மாநிலத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதுவும் மார்ச்சில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில்கூட வெற்றிபெறாமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து சோனியா காந்தி விலகிய பிறகு, மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தலைவரானார்.
அதன்பிறகு தற்போது நடந்து முடிந்த இமாச்சல், குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், குஜராத்தில் படுதோல்வியைச் சந்திருந்தாலும் இமாச்சலில் ஆட்சியைப் பிடித்தது. அந்த வரிசையில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற காட்சிகள் வேலையைத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற மோடி, அமித் ஷாவைப் போல் ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்லுங்கள் என காங்கிரஸ் தலைவர்களுக்கு கார்கே அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவரான பிறகு முதன்முறையாக கர்நாடகாவிலிருக்கும் தன் சொந்த ஊரான கலபுர்கிக்கு வருகைபுரிந்து காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய கார்கே, “இன்னும் சிலர் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை உச்சரிக்கின்றனர். கர்நாடகாவை வெற்றி பெற அவர்கள் ஏற்கெனவே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பாஜக, மோடி, அமித் ஷா, அவர்களின் அமைச்சர்கள் போல கிராமங்களுக்குச் சென்று மாநிலம் முழுவதும் பயணம் செய்து, மக்களை நம் கட்சியின் பக்கம் ஈர்க்கும்படி நம் தலைவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
நம் கட்சியினர் அனைவருக்கும் என்னுடைய ஒரே அறிவுரை, அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். அதைச் செய்யாவிட்டால், மக்களுக்கு செய்யும் துரோகம் போன்றது அது. நமக்குள் நாமே சண்டை போட்டுக்கொண்டால், நாம் பெறுவதையும் இழக்க நேரிடும். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எனக்கு இங்கு காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் ஆட்சியும் வேண்டும்” என்று கூறினார்.