சென்னை: ”நான் சாதாரண ஸ்டாலின் அல்ல… தமிழகத்தை நிச்சயமாக நம்பர் 1 மாநிலமாக மாற்றுவேன்”, என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் திமுக அலுவலகத்தில் நடந்த திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டுள்ளீர்கள். புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆட்சிக்கு வந்த போது கோவிட் தாக்கம் இருந்தது. அதில் இருந்து மீண்டோம். அன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மட்டும் சுகாதாரத்துறை அமைச்சர் அல்ல. முதல்வர் முதல் அனைத்து அமைச்சர்களும் சுகாதார அமைச்சராக மாறினோம். அதனால், கோவிட்டை கட்டுப்படுத்த முடிந்தது.
இது முடிவதற்கு முன்பே வெள்ளம், பெரிய மழை வந்தது. அதனை சமாளித்து வெற்றி கொண்டோம். தற்போது புயல் வந்தது. புயலையே சந்திக்கும் ஆற்றல் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு உள்ளது. உழைப்பு… உழைப்பு… உழைப்பு… தான் நமது மூலதனம் என கருணாநிதி கூறினார். அதனை ஸ்டாலினிடம் பார்க்கிறேன் எனவும் கூறினார். நேற்று முதல் போனை கீழே வைக்க முடியவில்லை. சிறப்பாக செயல்பட்டதாக அனைவரும் பாராட்டுகின்றனர். சமூக வலைதளங்களிலும் பாராட்டு குவிகிறது.
நம்பர் 1 முதல்வர் என்பதில் பெரிய பெருமையோ, பாராட்டாகவோ பார்க்கவில்லை. என்றைக்கு தமிழகம் நம்பர் 1 மாநிலம் என வருகிறதோ அன்று தான் பெருமை. அதனை நிச்சயம் நிறைவேற்றுவேன். ஏனென்றால், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நிச்சயம் அதனை நிறைவேற்றுவேன்.
அளவோடு குழந்தை
குடும்ப கட்டுப்பாட்டுக்காக மத்திய அரசும், மாநில அரசும் பல கோடி ரூபாய் செலவு செய்து பிரசாரம் செய்கிறது. முன்பு குடும்ப கட்டுப்பாடு என்ற நிலை ” நாம் இருவர், நமக்கு மூவர்” என்று இருந்தது. இது இன்றைக்கு ” நாம் இருவர், நமக்கு இருவர்” என மாறியது. தற்போது ”நாம் இருவர், நமக்கு ஒருவர்” என்று உள்ளது. நாளை இதுவே மறலாம். ”நாம் இருவர், நமக்கு ஏன் இன்னொருவர்” என வந்தாலும் ஆச்சர்யமில்லை. ” நாமே குழந்தை, நமக்கு ஏன் குழந்தை ” என்ற நிலை வந்தாலும் ஆச்சர்யபடுவதில்லை. நாட்டின் நிலைமை அப்படி உள்ளது. குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து என்ற பெருமை பெற்று தந்தவர் கருணாநிதி. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement