விருதுநகர்: விருதுநகரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு தயார் நிலையில் உள்ளது. விருதுநகர் அரசு தலை மை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக 2019- 20ல் தரம் உயர்த்தப்பட்டது. இதற்காக தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே இருந்த 20க்கும் மேற்பட்ட மருத்துவமனை கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.500 படுக்கைகள் மற்றும் நவீன வசதிகளுடன் தரைத்தளம் மற்றும் 6 மாடிகளுடன் கூடிய மருத்துவமனை 4 லட்சத்து 90,933 சதுர அடி பரப்பளவில் கட்ட ரூ.168.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
* மருத்துவ சேவையில் பயிற்சி மாணவியர்
விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவக்கல்லூரி 23 ஏக்கர் பரப்பளவில் ரூ.212 கோடியில் கடந்த 12.1.2022ல் திறக்கப்பட்டு, 150 மாணவர்கள் சேர்க்கையுடன் செயல்பட்டில் உள்ளது. தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தயார் நிலையில் உள்ளது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் 145 மருத்துவர்கள், 290 செவிலியர்கள் என மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 300 செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியரும் மருத்துவ சேவையாற்றி வருகின்றனர்.
* எந்த மாடியில் எந்த மையம்
புதிய மருத்துவமனை வளாகத்தில் தரைத்தளத்தில் மருத்துவ ஆவண காப்பக அறை, மருந்து கிடங்கு, அவசர ஊர்தி பணியாளர் அறை, வெளி நோயாளிகள் பிரிவு கதிரியக்க துறை, மைய தொற்று நீக்கம் மற்றும் வழங்கல் துறை, சலவையகம் அமைந்துள்ளது.முதல் மாடி: அவசர அறுவை சிகிச்சை பிரிவு, படிநிலை மருத்துவ பிரிவு, ரத்த மையம், பொது மருத்துவம் வெளி நோயாளிகள் பரிவு, முட நீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை புற நோயாளிகள் பிரிவு, மருந்தகம், இயன்முறை மருத்துவ சிகிச்சை புற நோயாளிகள் பிரிவு, முதியோர் நல சிகிச்சை புற நோயாளிகள் பிரிவு, உறைவிட மருத்துவ அலுவலர், உதவி உறைவிட அலுவலர், செவிலியர் கண்காணிப்பாளர் அறைகள், மின்ஒலி இருதய வரைவு அறை, எக்ஸ்ரே, ஊசி போடும் இடம், மருந்து கட்டும் இடம், புற்றுநோய் அறிகுறி கண்டறியும் இடம், இஎம்ஜி மற்றும் அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை பிரிவுகள் உள்ளன.
2வது மாடி: அவசர அறுவை சிகிச்சை அரங்கம், பொது அறுவை சிகிச்சை புற நோயாளிகள் பிரிவு, தோல் மற்றும் பால்வினை நோய் பிரிவு, பல், கண், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு, ரத்த பரிசோதனை மையங்கள், மனநல மருத்துவ பிரிவு, பேச்சு பயிற்சி அறை சிகிச்சை பிரிவுகள் உள்ளன. 3வது மாடி: முதியோர் நல சிகிச்சை, தீவிர மருத்துவ சிகிச்சை, தீவிர இருதய சிகிச்சை பிரிவு, பெண்கள், ஆண்களுக்கான 5 உள் நோயாளிகள் பிரிவு சிகிச்சை வசதி உள்ளன.
4வது மாடி: ஆண்கள், பெண்களுக்கான 3 ஆபரேசன் தியேட்டர்கள், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை உள் நோயாளிகள் பிரிவு, சிறுநீரக சுத்திகரிப்பு உள் நோயாளிகள் பிரிவு, பெண்கள் ஆபரேசன் தியேட்டர், மனநல மருத்துவம் உள் நோயாளிகள் பிரிவு, தோல் மற்றும் பால்வினை நோய் சிகிச்சை உள் நோயாளிகள் பிரிவு உள்ளது. 5வது மாடி: பெண்கள் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, கண் மருத்துவ சிகிச்சை உள் நோயாளிகள் பிரிவு, ஆண்கள், பெண்களுக்கான முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சைக்கான 3 உள் நோயாளிகள் பிரிவுகள் உள்ளது.
6வது மாடி: மயக்கவியல் துறை, மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம், தெளிநிலை சிகிச்சை பிரிவு, கட்டண சிகிச்சை உள் நோயாளிகள் பிரிவு, தீவிர அறுவை சிகிச்சை பிரிவு அமைந்துள்ளது. அனைத்து பிரிவுகளுடன் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டும் பணி பிப்.2020ல் துவங்கி 19.1.2022ல் முடிக்க ஒப்பந்தம் பிறப்பிக்கப்பட்டது. கொரோனா மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் 9 மாத தாமத்திற்கு பிறகு கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது.
கட்டி முடிக்கப்பட்டு ஒருமாதம் நிறைவடைந்த நிலையில் மருத்துவமனையை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தற்போது நிலவும் மாத்திரைகள் தட்டுப்பாடு, உள்நோயாளிகளை டாக்டர் சென்று பார்ப்பதில்லை, பண வசூல் உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும். நோயாளிகளை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நடைமுறையை தவிர்த்து அனைத்து சிகிச்சைகளும் விருதுநகரில் அரசு மருத்துவக்கல்லூரியில் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* அதிநவீன வசதிகள்
இதுகுறித்து டீன் சங்குமணி கூறுகையில், ‘அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்ட மருத்துவமனை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தினசரி 1800 வெளி நோயாளிகள், 470 உள்நோயாளிகள், 10 முதல் 20 பிரசவம் பார்க்கும் வசதி மற்றும் 235 எக்ஸ்ரே, 45 சிடி ஸ்கேன், 10 எம்ஆர்ஐ, 62 எக்கோ, 60 ஸ்கேன் உள்ளிட்டவை எடுக்கும் வசதிகள் உள்ளன. நோயாளிகளிடம் வசூலிக்கும் ஊழியர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.