மாண்டஸ் புயல் கரையை கடந்த போது ஏற்படுத்திய சேதங்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த பேச்செல்லாம் இந்த விஷயம் ஓரங்கட்டி விட்டது. சமூக வலைதளங்களில் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் வகையில் திமுகவும், பாஜகவும் பதிவுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். அதாங்க… சென்னை காசிமேட்டில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர்
நேற்று ஆய்வு செய்த போது மேயர் பிரியா ராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கான்வாயில் ஃபுட் போர்டு அடித்த படியே சென்றார்களே?
அண்ணாமலை கடும் விமர்சனம்
அதே விஷயம் தான். இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து கொண்டு திராவிட மாடல், அறிவாலயம் என்றெல்லாம் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். குறிப்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், சுய மரியாதை இயக்கம், சமூக நீதி இயக்கம், சாமானியர்களுக்கான கட்சி.
கான்வாயில் தொங்கி சென்ற அதிகாரிகள்
இப்படிப்பட்ட பொய்யான வரையறைகள் எல்லாம் இறந்து போய்விட்டன. நீண்ட காலத்திற்கு முன்பே குழி தோண்டி புதைத்து விட்டனர். இதை அறிவாலயம் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. இந்த படத்தை நீங்களே பாருங்கள். சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கான்வாய் வாகனத்தில் தொங்கிக் கொண்டு செல்கின்றனர் எனப் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பதிலடி
இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கலவையான விமர்சனங்களும் பதிவிடப்பட்டு வருகின்றன. தஞ்சை வடக்கு பாஜக என்ற ட்விட்டர் பக்கத்தில் போடப்பட்டுள்ள பதிலில், அன்றே சொன்னார் மணிவண்ணன் என்று குறிப்பிட்டு ஒரு திரைப்படக் காட்சியை பதிவிட்டிருக்கின்றனர்.
அதேசமயம் அண்ணாமலை பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த ஆண்டு சென்னை பெருமழையின் போது தண்ணீர் தேங்கி நின்ற இடத்தில் படகில் சென்று அண்ணாமலை வீடியோ எடுத்ததை பதிவிட்டுள்ளனர்.
திராவிட மாடல் விமர்சனம்
இதற்கிடையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை வம்புக்கு இழுத்துள்ளனர். இதுதவிர தும்கூர் பெண் மேயருக்கு பிரதமர் மோடி தலை குனிந்து வணக்கம் சொல்லும் புகைப்படத்தையும், சென்னை திமுக மேயர் முதல்வர் கான்வாயில் தொங்கிக் கொண்டே செல்லும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு திராவிட மாடல் ஜி என்று விமர்சனம் செய்துள்ளனர்.
மேயர் பிரியாவிற்கு புகழாரம்
மேலும், களப்பணியில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. இவர் நேரிடையாக பணி செய்கிறார். துணிச்சல் தெம்பு இருக்கிறது. மேயர் பிரியா மிகச்சிறந்த களப்பணியாளர் என்று ஒருவர் புகழாரம் சூட்டியுள்ளார். மற்றொருவர் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் கால்கள் தண்ணீரில் படக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் தூக்கிக் கொண்டு செல்லும் புகைப்படத்தை பதிவிட்டு மாறி மாறி பதிலடி கொடுத்து வருகின்றனர்.