ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே உள்ள ரங்காரெட்டி மாவட்டம், மன்னகூடா பகுதியில் வசிப்பவர் தாமோதர் ரெட்டி. இவருடைய மனைவி நிர்மலா, மகள் வைஷாலி. கடந்த சில மாதங்களாக வைஷாலியை நவீன் ரெட்டி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். வைஷாலியை செல்போனில் நவீன் படம் எடுத்து, இவர்தான் என் மனைவி வைஷாலி என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
இவர் மீது ஏற்கெனவே ஆதிபட்லா காவல் நிலையத்தில் வைஷாலியின் பெற்றோர் 3 முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வைஷாலிக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. நேற்றுமுன்தினம் மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வைஷாலி வீட்டுக்கு வரவிருந்தனர். இந்த தகவலை அறிந்த நவீன், நேற்றுமுன்தினம் காலை திடீரென 100-க்கும் மேற்பட்டவர்களை கார்களிலும், பைக்குகளிலும் வைஷாலியின் வீட்டருகே அழைத்து வந்தார். வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாமோதர் ரெட்டியின் கார்களையும், வீட்டு கண்ணாடிகளையும், கண்காணிப்பு கேமராக்களையும் அந்த கும்பல் உடைத்து நொறுக்கியது.
அதை தடுக்க சென்ற தாமோதர் மற்றும் அவரது குடும்பத்தினரையும் அந்த கும்பல் அடித்து உதைத்தது. மேலும், வீட்டுக்குள் புகுந்து மேஜை, நாற்காலி, டிவி, பிரிட்ஜ் என அனைத்து பொருட்களையும் உடைத்து நாசம் செய்தனர். பயத்தில் அறையில் பதற்றத்தில் இருந்த வைஷாலியை உதைத்து, காரில் கடத்தி சென்றனர். சினிமா பட பாணியில் வீட்டில் இருக்கும் பெண்ணை 100 ரவுடிகளுடன் வந்து கடத்தி சென்றதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவசர எண் 100-க்கு போன் செய்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் ஒரு மணி நேரம் கழித்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த வைஷாலியின் பெற்றோர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதன் பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.
பின்னர் போலீஸார் சுமார் 10 குழுக்களாக பிரிந்து நல்கொண்டா, ஹைதராபாத் ஆகிய பகுதிகளிலும், நவீன் ரெட்டியின் வீடு, நண்பர்களின் வீடுகளிலும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த நவீன் ரெட்டி உட்பட இதில் தொடர்புடைய மொத்தம் 36 பேரை கைது செய்து, இதற்கு பயன்படுத்திய 2 வாகனங்களையும் எல்.பி. நகர் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் வைஷாலியையும் ஹைதராபாத் போலீஸார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.