மதுரை விமான நிலையத்தில் பன்னாட்டு விமான சேவை தொடங்குவது எப்போது: கிடப்பில் கிடக்கும் ‘அண்டர் பாஸ்’ திட்டம்: விமான போக்குவரத்து ஆணையம் மீது புகார்

மதுரை: மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அறிவித்தும், பன்னாட்டு விமான சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு அண்டர் பாஸ் திட்டத்தை, விமான போக்குவரத்து ஆணையம் கிடப்பில் போட்டதே காரணம் என தொழிற்துறையினர் புகார் தெரிவிக்கின்றனர். மதுரை மாநகரம் பழம் பெருமை மிக்க கோயில் நகரமாகும். இங்குள்ள விமான நிலையம், கடந்த 2012ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது, சர்வதேச நிலையமாக மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து முதலில் கொழும்புக்கும், துபாய்க்கும் விமானங்கள் இயக்கப்பட்டன.

இதேபோல, 2014ல் சிங்கப்பூருக்கும், மஸ்கட்டுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், மதுரை விமான நிலைய ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கும், இங்கிலாந்துக்கும் விமானங்களை இயக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெலங்கானா பொறுப்பாளரும், விருதுநகர் எம்.பியுமான மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

கிடப்பில் கிடக்கும் அண்டர் பாஸ் திட்டம்:

மதுரை விமான நிலையத்தின் ஓடுதளத்தை (ரன்வே) விரிவாக்கம் செய்ய ‘அண்டர் பாஸ்’ முறையில் மேல்பகுதியில் விமான ஓடுதளம், கீழ்பகுதியில் வாகனங்கள் செல்லவும், சுற்றுச்சாலை துண்டிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வாரணாசி, மைசூர், புதுடெல்லி பன்னாட்டு விமான நிலையங்களில் ‘அண்டர் பாஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, மதுரையில் அமைக்க வேண்டும். ஆனால், மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையின்படி, அண்டர் பாஸ் திட்டத்திற்கு ரூ.250 கோடியாகும். சுற்றுச்சாலையாக அமைக்கப்பட்டால் ரூ.100 கோடியில் முடித்து விடலாம் என விமான போக்குவரத்து ஆணையம் கருதி இந்த அண்டர் பாஸ் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதற்காக 2009 முதல் நில ஆர்ஜிதப்பணிகள் நடைபெற்று வந்தாலும், தற்போதுதான் முடியும் தருவாயில் வந்துள்ளது. மேலே உள்ள செயல்படுத்த வேண்டிய கட்டமைப்புகளை உடனடியாக செயல்படுத்தினாலே, மதுரை விமான நிலையத்தை, பன்னாட்டு விமான நிலையமாக உடனடியாக அறிவித்து விடலாம்.
இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் கூறுகையில், ‘மதுரை விமான நிலையம், தற்போது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என 2 ஷிப்டுகள் செயல்படுகின்றன. வெளிநாட்டு விமானங்கள் இரவு நேரத்தில் இயங்குவதைத்தான் விரும்புகின்றன.

எனவே, மதுரை விமான நிலையம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நாள் முழுவதும் இயங்கும் விமான நிலையமாக மூன்று ஷிப்டுகள் செயல்பட ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை விமானநிலையம் இன்று வரை கஸ்டம்ஸ் ஏர்போர்ட் ஆக மட்டுமே உள்ளது. எனவே, திருச்சி, கோவை விமான நிலையங்களை போன்று மதுரை விமான நிலையமும் உடனடியாக பன்னாட்டு விமான நிலையமாக (இன்டர்நேஷனல் ஏர்போர்ட்) தகுதி மாற்றம் செய்து அறிவிக்கப்பட வேண்டும். பிற நாடுகளுடனான இந்திய அரசின் இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில், மதுரை விமானநிலையம் ஒரு ‘பாயிண்ட் ஆப் கால்’ ஆக சேர்க்கப்பட வேண்டும்.

குறைந்தபட்சம் இந்தியாவின் அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், குவைத், ஓமன், கத்தார் போன்ற நாடுகளுடனாவது ஒப்பந்தத்தில் மதுரை சேர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்தந்த வெளிநாட்டு விமான நிறுவனங்கள் அவர்களது விமானங்களை அங்கிருந்து மதுரைக்கு நேரடியாக இயக்க முடியும். மதுரை பன்னாட்டு விமான நிலையமாக மாறும்பட்சத்தில் மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், குவைத், ஓமன், கத்தார் ஆகிய நாடுகளுக்கும் பயணிகள் எளிதில் சென்று வரலாம். சென்னை, மும்பை போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியது இருக்காது. மதுரை நகரம் தொழில் மட்டுமின்றி அனைத்துத்துறைகளிலும் மேலும் வளர்ச்சியடைவதுடன், தென் தமிழக மக்களும் பயனடைவர்” என்றார்.

*ஆர்ஜிதம் செய்யப்படாத 89 ஏக்கர்

மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக விமான ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் வரதன் அனந்தப்பன், மதுரை விமான நிலைய விரிவாக்கப்பணிகள் நிலை குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அவரது கேள்விக்கு, மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான 633.17 ஏக்கரில், இதுவரை 543.63 ஏக்கர் நிலம் மட்டுமே மத்திய விமான போக்குவரத்து துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், கட்டுமானம் இன்னும் திட்டமிடுதல் நிலையிலேயே உள்ளது. மீதமுள்ள 89.54 ஏக்கர் நிலம் வழங்கப்படாமல் இருக்கிறது என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, விமான நிலைய விரிவாக்க பணிகள் தள்ளிப்போகாமல் தடுக்கவும், சர்வதேச விமான நிலையமாக மாற்றவும் தமிழக அரசும், மதுரை மாவட்ட நிர்வாகமும் விரைவாக மீதமுள்ள நிலங்களை உடனடியாக கையகப்படுத்தி, விமானத்துறையிடம் வழங்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள், குறிப்பாக மதுரை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.