“சத்துணவு முட்டையில் ஊழலா? அண்ணாமலையின் பேச்சு அர்த்தமற்றது!" – அமைச்சர் கீதா ஜீவன்

மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் தொகுதியின் எம்.எல்.ஏ மார்கண்டேயன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.செந்தில்ராஜ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க-வின் பல்வேறு அணிகள் சார்பில் ‘மாற்றத்திற்கான மாநாடு’ நேற்று (10-ம் தேதி மாலையில்) நடந்தது. அதில் பேசிய பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தமிழகத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் வழங்கப்பட்டு வரும் முட்டைகளை, அழுகிய முட்டைகளாக வழங்குவதில் சாதனை படைத்துள்ளார் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கீதாஜீவன். அதனால், அவருக்கு `அழுகிய முட்டை அமைச்சர்’ என்று பெயர் வழங்கலாம்” எனப் பேசியிருந்தார்.

அமைச்சர் கீதா ஜீவனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த கீதா ஜீவன், “தமிழக சமூக நலத்துறையின் மூலமாக அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் முட்டை அழுகி இருப்பதாகவும், அதில் ஊழல் நடப்பதாகவும் நேற்று கோவில்பட்டியில் நடந்த கட்சிக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியுள்ளார்.

அமைச்சர் கீதா ஜீவன்

முட்டைகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு சம்மந்தப்பட்ட அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும்போது போக்குவரத்தின் காரணமாக சில முட்டைகள் உடைந்து அழுகும் நிலை ஏற்படுகிறது.

இந்த மாதிரியான முட்டைகள் கண்டறியப்பட்டு ஒப்பந்தகாரர்களிடம் கொடுக்கபட்டு மாற்றப்பட்டு அதே எண்ணிக்கையில் மீண்டும் பெறப்பட்டு வருகிறது. இதுதான் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இதைப்போல 6 இடங்களில் இல்லை 50 இடங்களில்கூட நடந்திருக்கலாம். இது எல்லா இடங்களிலும் நடைபெறுகின்ற வழிமுறைதான். முட்டை கொள்முதல் வெளிப்படையாகவே நடக்கிறது. இதில் ஊழல் என்ற பேச்சிற்கே இடமில்லை. இது குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளேன். ஆனால், இது அவர் மண்டையில்தான் ஏறவில்லை. ஏன் என்று தெரியவில்லை. அவருக்கு சரியான புரிதல் இல்லை என்பது தெளிவாகிறது. அவரது பேச்சு அர்த்தமற்றது.

பண மதிப்பிழப்பு கொள்கையின் மீதான குற்றச்சாட்டை காலம் காலமாக எதிர்க்கட்சிகள் கூறி வருகிறோம். இதனால், பொருளாதாரம் ஏற்றம் இல்லை, மக்கள் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர். அதைப்பற்றி அண்ணாமலை வாய் திறக்க மறுப்பது ஏன்? மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம் அமைத்ததிலும் ஊழல் நடந்ததாகச் சொல்கிறார்.

அமைச்சர் கீதா ஜீவன்

அதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. கடற்கரையோரம் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்பதற்காகவே மரப்பாலம் அமைக்கப்பட்டது.

மரத்தையே ஒடித்து போடும் புயல், மரப்பாலத்தை விட்டு வைக்குமா? புயலின் தாக்கத்தினால்தான் மரப்பாலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதை விரைவில் மாற்றி அமைத்து விடுவோம். கட்சிக்கூட்டங்களில் மைக் கிடைத்துவிட்டாலே தி.மு.க ஆட்சியை குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார் அண்ணாமலை.

நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலைக்கு எங்கள் தலைவர் ஸ்டாலினைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியுமில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.