2024 எம்பி எலக்ஷன்… திமுக உடன்பிறப்புகளுக்கு செந்தில் பாலாஜி பிறப்பித்த கண்டிப்பான உத்தரவு!

கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம், கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

இதில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக் குழுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, “ஒன்றியம், நகர கழக நிர்வாகிகளுக்கு பலர் விண்ணப்பித்து இருக்கலாம், ஆனால் ஒருவர் தான் பொறுப்பாளராக இருக்க முடியும், பதவி கிடைக்காதவர்களுக்கு பல்வேறு அணியில் பொறுப்பாளராக பொறுப்பு வழங்கப்படும். விருப்பப்படக் கூடியவர்கள் மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்க வேண்டும், ஆலோசித்து அவர்களுக்கு பதவி வழங்க தளபதியிடம் பரிந்துரைக்கப்படும்.

வரும் 16 ஆம் தேதி திமுக பொதுக் கூட்டம் கரூரில் நடைபெற உள்ளது. இதில் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொள்ள உள்ளார். கரூர் மாவட்டத்தில் 1,047 வாக்குச்சாவடிகளில் பேராசிரியர் கே. அன்பழகன் படம் வைத்து புகழ் அஞ்சலி செலுத்த வேண்டும்.

சாதாரண தொண்டராக இருந்தாலும், அவர் நமது கழகத்திற்காக பணியாற்றக் கூடியவர்கள். அவர்களையும் மதித்து நடக்க வேண்டும். BLA 2 நியமன பொறுப்பாளர்கள் 100 வாக்காளர்களிடம் நன்மதிப்பை பெற்றவர்களாக இருக்க வேண்டும். பதவி வாங்கிக் கொண்டு ஆள் போட்டு வேலை பார்க்க கூடாது. தொடர் வெற்றிகளை பெற கட்டுப்பாடுகள் மற்றும் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். எவ்வாறு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றோமோ அதே போன்று 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற நாம் அனைவரும் இணைந்து பணி.யாற்ற வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தி பேசினார்.

2006-11 இல் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்த மின்வெட்டே, 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. அப்போது ஏற்பட்ட தொடர் மின்வெட்டால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள், தொழில்முனைவோர் என பலதரப்பினரும் பாதிக்கு ஆளாகினர். குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த கொங்கு மண்டலம், அப்போதைய திமுக ஆட்சியில் கடுமையான பாதிப்பை சந்தித்தது.

2011, 2014, 2016 என அடுத்தடுத்த தேர்தல்களில் எதிரொலித்த அதன் எதிர்விளைவுகள், திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கொங்கு மண்டலத்தில் இழந்த செல்வாக்கை, செந்தில் பாலாஜி மூலம் இப்போதுதான் திமுக கொஞ்சம், கொஞ்சமாக மீட்டெடுதது வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.