மோடி மற்றும் அமித்ஷாவின் தந்திரம் பலிக்காது; கர்நாடக முன்னாள் முதல்வர் சாடல்.!

கர்நாடகாவில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு 2023ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் முதன்மையாகவும், குமாரசாமி தலைமையிலான ஜனதா தளம் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி தான் தற்போது பாஜக ஆட்சி அமைத்து செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது. கர்நாடகத்தில் பாஜக தேர்தலில் வெற்றி பெற்று ஒரு முறைகூட ஆட்சி அமைக்காத நிலையில், நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தேர்தலுக்கான பணிகளை மூன்று கட்சிகளும் முடுக்கிவிட்டுள்ளது. அந்தவகையில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் முதல் முறையாக சொந்த மாநிலத்திற்கு மல்லிகார்ஜுன் கார்கே நேற்று வருகை தந்தார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், மல்லிகார்ஜூன் கார்கே நேற்று பேசினார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வரும் சட்டமன்றக் குழு தலைவருமான சித்தராமையா ஆகியோர் தலைமையில் கல்புர்கியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்கள், நகரங்களுக்கு நீங்கள் சென்று மக்களை ஈர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் மோடி, அமித்ஷா மற்றும் ஒன்றிய அமைச்சர்களை போல் நீங்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அவ்வாறு செய்ய தவறினால் கன்னட மக்களுக்கு நாம் துரோகம் இழைத்தது போல் ஆகிவிடும். முதல்வர் மற்றும் அமைச்சர் பதவிகளுக்காக நாம் நமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டால், நிச்சயம் நமக்கு தோல்வி தான் கிடைக்கும். ஹிமாச்சல் பிரதேசத்தை போல் கர்நாடகாவிலும் நமது வெற்றி நிச்சயம். அதற்கு நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.

அதேபோல் குஜராத் தேர்தல் வெற்றி கர்நாடகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜகவினர் கூறிவருகின்றனர். அதேபோல் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார்.

ஏற்கனவே 2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஒரு முஸ்லிம் அல்லது தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்க கட்சி தயாராக உள்ளது. எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 123 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் இலக்கு என்று தெரிவித்து அதிரடி காட்டினார்.

இந்தநிலையில் மோடி மற்றும் அமித்ஷாவின் தந்திரம் இங்கு பலிக்காது என குமாரசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘ கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றும் எங்களது கட்சிதான். காங்கிரஸ்காரர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு கொள்கிறார்கள். பாஜகவினரால் போதுமான துன்பத்தை மக்கள் அனுபவித்து விட்டார்கள். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் தந்திரங்கள் இங்கு பலிக்காது. மக்கள் ஏற்கனவே தங்களை தயார்படுத்திவிட்டனர். வரும் தேர்தலில் ஜனதா தளம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும்’’ என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.