காற்றினிலே… வரும் கீதம்… 'இசைக்குயில்' எம் எஸ் சுப்புலக்ஷ்மி நினைவு நாள்

காற்றினிலே… வரும் கீதம்… என இசைபாடி இசையுலகை தன்வயப்படுத்தி வைத்திருந்த 'இசைக்குயில்' திருமதி எம்எஸ் சுப்புலக்ஷ்மி அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்று…

1. “இசைப் பேரரசி” என்ற புகழுக்கு சொந்தக்காரரான எம்எஸ் சுப்புலக்ஷ்மி, மதுரையில் சுப்ரமணியம் அய்யர் – சண்முகவடிவு தம்பதியரின் மகளாக 1916ல் செப்., 16ல் பிறந்தார்.

2. இசைப் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த இவரது பாட்டி வயலின் வாசிப்பதிலும், தாயார் வீணை மீட்டுதிலும், பாடுவதிலும் திறமை பெற்றவர்கள்.

3. சிறிய வயதிலேயே இசையில் அளவு கடந்த ஆர்வம் கொண்ட எம்எஸ் சுப்புலக்ஷ்மிக்கு அவரது தாயார் தான் முதல் குரு.

4. கர்நாடக இசையை செம்மங்குடி சீனிவாச அய்யரிடமும், ஹிந்துஸ்தானி இசையை பண்டிட் நாராயணராவ் வியாஸிடமும் கற்றார்.
5. ஆரம்ப காலங்களில் தனது அம்மாவின் வீணை கச்சேரிகளில் மட்டும் பாடி வந்த இவர், செம்பை வைத்தியநாத பாகவதர், பாலக்காடு டிஎஸ் மணி அய்யர் போன்ற இசை மேதைகளின் கச்சேரிக்கு தனது தாயாரோடு சென்று ரசித்து, இசை ஞானத்தை மேலும் வளர்த்துக் கொண்டார்.

6. 1926ல் தனது தாயாரின் வீணை இசையோடு இணைந்து இவர் பாடிய பாடல் இசைதட்டாக முதன் முதலில் வெளியானது.

7. 1929ல் இவரது முதல் மேடை கச்சேரி “சென்னை மியூசிக் அகாடமி”யில் அரங்கேறியது. தொடர்ந்து பல கச்சேரிகளில் தனது தேனினும் இனிய குரலால் இசைப் பிரியர்களை தன்வசப்படுத்தினார்.

8. 1935ல் மிருதங்க ஜாம்பவான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையின் மணிவிழாவில் அரங்கேறிய இவரது கச்சேரி, இவரது இசை ஞானத்தை வெளியுலகம் அறியச் செய்தது.

9. 1938ல் கே சுப்ரமணியம் இயக்கத்தில் வெளியான “சேவாசதனம்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்ததன் மூலம் முதன் முதலில் வெள்ளித்திரைக்கு ஒரு நடிகையாக அறிமுகமானார் எம்எஸ் சுப்புலக்ஷ்மி.

10. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தனது கணவர் கல்கி சதாசிவாத்துடன் இணைந்து “ராயல் டாக்கி டிஸ்டிரிபியூட்டர்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினார்.

11. “சகுந்தலை” என்ற படத்தை சொந்தமாக தயாரித்து, சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார் எம்எஸ் சுப்புலக்ஷ்மி. இதில் துஷ்யந்த் மகாராஜாவாக பிரபல கர்நாடக இசைப் பாடகர் திரு ஜிஎன் பாலசுப்ரமணியம் நடித்திருக்க, எல்லிஸ் ஆர்.டங்கன் படத்தை இயக்கியிருந்தார்.

12. 24 பாடல்களைக் கொண்ட இந்த படத்தில் தான் முதன் முதலாக க்ளோசப் காட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1940ல் வெளிவந்த இந்த படம் பெரிய வெற்றியை தேடித் தந்தது எம்எஸ் சுப்புலக்ஷ்மிக்கு.

13. இதனைத் தொடர்ந்து வட இந்திய நடிகையான சாந்தா ஆப்தே நாயகியாக நடித்து வெளிவந்த “சாவித்திரி” படத்தில் நாரதராக நடித்தார்.

14. 1945ல் வெளிவந்த “மீரா” படம் இந்திய அளவில் எம்எஸ் சுப்புலக்ஷ்மிக்கு பெருமையை தேடித் தந்தது.

15. இந்த படத்தில் இடம் பெற்ற “காற்றினிலே வரும் கீதம்” பாடல் உட்பட அனைத்துப் பாடல்களும், இன்றைய தலைமுறை இசை ஆர்வலர்களையும் வெகுவாக ஆக்கிரமித்திருக்கிறது என்றால் அது மிகையன்று.

16. ஹிந்தியிலும் “மீரா” படம் வெற்றி பெற்றதோடு, அன்றைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பாராட்டுக்குரியவர் ஆனார் எம்எஸ் சுப்புலக்ஷ்மி. மேலும் கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்களால் “நைட்டிங்கேள் ஆப் இந்தியா” என்றும் அழைக்கப்பட்டார்.

17. 1966ல் உலக அமைதியை வலியுறுத்தும் விதத்தில் ஐ.நா சபையில் மூதறிஞர் ராஜாஜி எழுதிய “மே தி லார்ட் பர்கிவ் அவர் சின்ஸ்” என்ற பாடலை பாடி பெருமை சேர்த்தார் எம்எஸ் சுப்புலக்ஷ்மி.

18. இவரது தேனினும் இனிய குரலில் வந்த “பஜகோவிந்தம்”, “விஷ்ணு சகஸ்ரநாமம்”, “வெங்கடேச சுப்ரபாதம்” போன்றவற்றை கேட்கும் போது, கேட்போரின் மனங்களில் தெய்வம் குடிகொள்ளும் என்றால் அது மிகையன்று.

19. இசையின் பெருமையாக கருதப்பட்ட இசையரசி, 1997ல் தனது கணவர் கல்கி சதாசிவம் மரணத்திற்குப் பின் பாடுவதை முற்றிலுமாக நிறுத்தினார்.

20. 1954ல் “பத்மபூஷன் விருது”, 1956ல் “சங்கீத நாடக அகாடமி விருது”, 1968ல் “சங்கீத கலாநிதி விருது”, 1974ல் ஆண்டு ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் “மக்சசே விருது”, 1975ல் “பத்மவிபூஷண் விருது” மற்றும் “சங்கீத கலாசிகாமணி விருது”, 1990ல் நாட்டு ஒருமைபாட்டிற்கான “இந்திராகாந்தி விருது”, 1998ல் இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” என எண்ணற்ற விருதுளை பெற்று இசை உலகிற்கு பெருமை சேர்த்தார்.

21. 2004ல் கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்எஸ் சுப்புலக்ஷ்மி சிகிச்கை பலனின்றி இம்மண்ணுலகை விட்டு பிரிந்து காற்றோடு கலந்தார்.

பிறப்பு முதல் இறப்பு வரை இசை ஒன்றையே மூச்சாக வாழ்ந்த எம்எஸ் சுப்புலக்ஷ்மி ஒரு நூற்றாண்டை கடந்தாலும், அன்று பூத்த மலர் போல் இசை வடிவில் நம்மோடு இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்பதே உண்மை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.