எங்களின் அடுத்த இலக்கு கர்நாடகா; சத்தீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் உறுதி.!

68 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகளிடையே போட்டி நிலவியது. தேர்தலில் மூன்று கட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக – காங்கிரஸ் இடையே தான் இரு முனை போட்டி நிலவியது.

இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதன்படி, மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளில், காங்கிரஸ் பெரும்பான்மையைத் தாண்டி 40 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும், காங்கிரஸ் கட்சி, 19 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது.

இதை அடுத்து, முதலமைச்சர் பதவியை ஜெய்ராம் தாகூர் ராஜினாமா செய்தார். இதற்கிடையே புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய, தலைநகர் சிம்லாவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 40 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல், முன்னாள் முதலமைச்சர் பூபேந்திர ஹூடா, ஹிமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ராஜிவ் சுக்லா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஹிமாச்சல் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று பதவி ஏற்றார். அதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் சொந்த மாநிலத்திற்கு இன்று வந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பூபேஷ் பாகல், ‘‘ ஹிமாச்சல் பிரதேச வெற்றியில் சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது. சத்தீஸ்கரின் திட்டங்கள் ஹிமாச்சல் பிரதேசத்தின் 10 வாக்குறுதிகளில் இடம் பெற்றுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது. அடுத்ததாக எங்களின் இலக்கு கர்நாடகா தான். நிச்சயமாக அங்கும் ஆட்சியமைப்போம்’’ என அவர் தெரிவித்தார்.

கர்நாடகாவில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு 2023ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் முதன்மையாகவும், குமாரசாமி தலைமையிலான ஜனதா தளம் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.