சென்னை அருகே பனையூரில் பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: 2 வாலிபர்கள் பரிதாப சாவு: சைக்ளிங்கை தடை செய்ய கோரி மக்கள் மறியல்

துரைப்பாக்கம்: சென்னை அருகே பனையூரில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். சைக்ளிங்கால்தான் விபத்து நடக்கிறது என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் கிட்சன் (25). இவர் சென்னை வைஷ்ணவா கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

இன்று காலை பைக்கில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் நோக்கி சென்றார். பனையூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வடலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த சரண் (23) என்பவர் பைக்கில் வந்தார்.  கண் இமைக்கும் நேரத்தில் 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சரண் பரிதாப உயிரிழந்தார் கிட்சன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து கிட்சனை மீட்டு பெரும்பாக்கம் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் ஏற்கனவே கிட்சன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதற்கிடையில் விபத்தை பற்றி கேள்விபட்டதும் அப்பகுதியை சேர்ந்த 100கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளிக்கரணை துணை கமிஷனர் மனோ தங்கராஜ், உதவி கமிஷனர்கள் ரியாசுதீன், ரவிக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், ‘வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும், திருவான்மியூரில் இருந்து முட்டுக்காடு வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்ளிங் செல்வது வழக்கம். இதற்காக இருவழி சாலை ஒரு வழி சாலையாக மாற்றப்படும். அதுபோன்று இன்றும் ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டு சைக்ளிங் நடந்தது. இருப்பினும் குறைந்த அளவில் சைக்ளிங் சென்றதால் வெளியூரை சேர்ந்த பொதுமக்களுக்கு இது தெரியவில்ைல. அதனால் இன்று விபத்து நடந்துள்ளது. சைக்ளிங் காரணமாகத்தான் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே சைக்ளிங்கை ரத்து செய்ய வேண்டும்’ என்றனர். அதற்கு போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.